தமிழில் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை சட்டத்தில் திருத்தம் – தமிழக அரசு அறிமுகம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தின் இடையே, தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் சீர்திருத்த சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை தமிழக அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இதற்கு முன்னதாக தமிழ்வழியில் பட்டப்படிப்பு படித்திருந்தால் தமிழக அரசுப்பணிகளில் 20 விழுக்காடு முன்னுரிமை வழங்கப்பட்டது.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமுன்வடிவின்படி, இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

அதாவது, பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப்பணிக்கு, பட்டப்படிப்புடன் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். அதே போன்று 10 ஆம் வகுப்பு தகுதியுள்ள அரசுப்பணிக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றிருக்க வேண்டும் என்று சட்டமுன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இது நிறைவேறிய பின்னர், ஆளுநரின் ஒப்புதல் பெற்று சட்டவடிவம் பெறும்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தமிழக சட்டப்பேரவையில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம் தமிழகத்தில் இனி ஆறாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தமிழில் எழுதியவர்கள் மட்டும்தான், தமிழ் வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டைப் பெற முடியும். இதன் மூலம் ஆங்கில வழிக் கல்வி மீதான மோகம் குறைந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தமிழ் வழியில் பயில முன்வருவார்கள். அதன் மூலம் மாணவர்களின் சிந்தனைத் திறன் அதிகரித்து, பல்வேறு துறைகளில் தமிழக மாணவர்கள் சாதனை படைக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் வாய்ப்பு ஏற்படும்.

என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வரவேற்றுள்ளார்.

Leave a Response