பங்குச்சந்தை கடும் சரிவு பல இலட்சம் கோடி இழப்பு – கதறும் இந்திய பொருளாதாரம்

உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் எனப்படும் கரோனா வைரஸ் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 பரவியுள்ளது.

அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் உயிர்ப்பலியை வாங்கியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 31 பேர் கரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தத் தடையால் பெருமளவு தொழில் தேக்கமடைந்து பொருளாதார பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதன் எதிரொலியால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவைச் சந்தித்தன.

மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் நேற்று வர்த்தகத்தின் முடிவில் 2,919.26 புள்ளிகள் சரிந்து 32,778.14 புள்ளிகளில் நிலைப் பெற்றது. ஒரேநாளில் சென்செக்ஸ் 8.18 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

தேசியப்பங்குச்சந்தை நிப்டியில் 868.25 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 9,590 புள்ளிகளில் முடிந்தது 8.90 சதவீதம் சரிந்தது. இந்த சரிவு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்நது வரலாற்றில் இல்லாத சரிவாக பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்தன.

வர்த்தகம் தொடங்கி சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் 3 ஆயிரம் புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. இதனால் வர்த்தகம் 45 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டது. சென்செக்ஸ் 2,919.26 புள்ளிகள் சரிந்து 29,685 புள்ளிகளாக வர்த்கமாகி வருகிறது. ஒரேநாளில் சென்செக்ஸ் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

தேசியப்பங்குச்சந்தை நிப்டியில் 965 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 8625 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதனால் முதலீட்டளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ.74.43 ஆக வீழ்ச்சி அடைந்து உள்ளது.
இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.12 ஆண்டுகளுக்குப் பிறகு 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் இன்றைய நாளை கறுப்பு வெள்ளி என்றழைக்கின்றனர்.

Leave a Response