பிரபல நடிகருக்கு கொரோனா – பகிரங்க அறிவிப்பால் பரபரப்பு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்குப் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான பாதிப்பைச் சந்தித்து வரும் இத்தாலியில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,295 இல் இருந்து 4,627 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 1,19,17 இல் இலிருந்து 1,26,139 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோரில் 68,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் டாம் ஹாங்க்ஸ் தனது முகநூல் பக்கத்தில், “ஹலோ நண்பர்களே… ரீட்டாவும் நானும் ஆஸ்திரேலியா வந்தோம். நாங்கள் சோர்வாக உணர்கிறோம். ஜலதோஷமும் உடல் வலியும் இருக்கிறது. கொஞ்சம் காய்ச்சலும் இருகிறது. இதனால் இருவரும் கொரோனா வைரஸுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டோம். இதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்து என்ன?.. மருத்துவ நிபுணர்கள் சில வழிமுறைகளைச் சொல்கிறார்கள். அதைப் பின்பற்ற வேண்டியதுதான். நாங்கள் தொடர்ந்து தனிமைபடுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுவோம். மீண்டும் பரிசோதனைகள் செய்யப்படும். பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்காகத் தனிமைபடுத்தப்படுகிறோம். அடுத்தடுத்த தகவல்களை உங்களுக்குத் தெரிவிப்போம். உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுகள் 2020 -இல், தன் வாழ்நாள் முழுக்க சினிமாவுக்காக அர்ப்பணித்த கலைஞருக்கு வழங்கப்படும் விழாவின் மிகப்பெரிய விருதான செஸில் பி டிமில்லே விருது, இந்த முறை `தி டாவின்சி கோடு’, `ஃபாரஸ்ட் கம்ப்’ உள்ளிட்ட படங்களில் நடித்த, டாம் ஹாங்க்ஸுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் டாம் ஹாங்ஸின் பகிரங்க அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response