நடிகர் ஆனந்த்ராஜ் தம்பியின் தற்கொலைக்குக் காரணம் என்ன?

புதுச்சேரி திருமுடிநகரைச் சேர்ந்தவர் கனகசபை (40).நடிகர் ஆனந்த்ராஜின் தம்பியான இவர் புதுவையில் வட்டிக்குப் பணம் கொடுப்பது, சீட்டு பிடிப்பது போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்தார். திருமணமாகாத இவர் தனியாக வசித்து வந்துள்ளார்.

தினந்தோறும் காலை வேளையில் கனகசபையிடம் சீட்டுப் பணத்தைக் கொடுக்க வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம். அதுபோல,நேற்று ( மார்ச் 5) காலையும் சீட்டுப் பணம் கொடுக்க அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். வெகுநேரம் காத்திருந்தும் கனகசபை வீட்டுக் கதவை திறக்காமல் இருந்ததால் அவரது சகோதரிக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

அதன் பிறகு, கனகசபையின் சகோதரியும், அக்கம்பக்கத்தினரும் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது அவர் மயங்கிக் கீழே விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, பெரியகடை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், கனகசபையின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கனகசபைக்கு ஆனந்த்ராஜைத் தவிர மற்றொரு இளைய சகோதரர் இருக்கிறார். அவர்களது பூர்வீக சொத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆனந்த்ராஜிடமும், மற்றொரு பங்கு இளைய சகோதரரிடம் இருந்துள்ளது. இளைய சகோதரர், கனகசபையின் பங்கைக் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் தனக்கு சொத்து கிடைக்காத கனகசபை விரக்தியடைந்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு தன்னுடன் இருந்த தாயாரும் காலமானதால் வெகு நாட்களாகவே கனகசபை மன உளைச்சல் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் நேற்று காலை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றையும் கனகசபை எழுதி வைத்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சூழலில் இன்று பிரேதப் பரிசோதனைக் கூடம் அருகே நடிகர் ஆனந்தராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடன் பிரச்சினையால் என் தம்பி தற்கொலை செய்துகொள்ளவில்லை. மிரட்டல் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டார். சமீபத்தில் ஒரு வீடு வாங்கியதில் பல்வேறு தலையீடுகள் இருந்தன. அதுவே அவரது தற்கொலைக்குக் காரணம்.

தற்கொலைக்கு முன்பு அவர் 4 பக்கத்துக்குக் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் சிலரைக் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி புதுச்சேரி அரசும் காவல் துறையும் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை உள்ளது. அவர் இறப்பு குறித்து விசாரணை நடந்து வருவதால் எந்தத் தகவலையும் வெளியிட முடியாது. என் தம்பியின் மரணம் எனக்குப் பேரிழப்பு” என்று குறிப்பிட்டார்.

Leave a Response