ரஜினி இவ்வளவு கோழையா? – தெறிக்கும் விமர்சனம்

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தில் ஒரு காட்சியில், ‘பணம் இருந்தால் கைதியும் ஷாப்பிங் போகலாம்; தென்னிந்தியாவில் கூட ஒரு கைதி இப்படி அப்பப்போ வெளியே போய்ட்டு வருவாங்களாமே!?’ என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

இந்த வசனம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவைக் குறிப்பிடுவதாக சர்ச்சை எழுந்தது. சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இதைக் கண்டித்தார். இக்காட்சியை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும் என படக்குழுவினரை அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், “ரஜினிகாந்தும், அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் இப்படி ஒரு வசனத்தை வைக்க அனுமதித்திருக்கக் கூடாது. உடனடியாக சம்பந்தப்பட்ட காட்சியை நீக்குவார்கள் என நம்புகிறோம். இல்லையேல், அவர்கள் மீதும் சட்டப்படி வழக்குத் தொடரப்படும்” என்று தனது பேட்டியில் குறிப்பிட்டார் ராஜா செந்தூர் பாண்டியன்.

இந்நிலையில், ‘தர்பார்’ படக்குழுவினர் அந்த வசனத்தைப் படத்திலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக லைகா நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், “எங்களின் ‘தர்பார்’ திரைப்படத்தில், கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதைக் குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ, அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதைப் புண்படுத்துவதாகத் தெரிய வந்ததால், அதைப் படத்திலிருந்து நீக்குகிறோம்” என்று தெரிவித்துள்ளது லைகா நிறுவனம்.

இந்நிகழ்வு பல விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. இதுகுறித்து பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் எழுதியிருப்பதாவது….

ரஜினியை புரிந்து கொள்ள இந்த ஒரு சந்தர்ப்பம் போதுமானது…!

ஒரு கைதி தனது பணபலத்தால் சிறை அதிகாரிகளை விலை பேசி,ஷாப்பிங் மட்டுமே செல்ல முடியும் என்று இது வரை நாம் நினைத்திருந்தோம்! ஆனால்,அவரால் ஒரு சூப்பர் ஸ்டாரைக் கூட சிறைக்குள்ளிருந்து அச்சத்திற்கு உள்ளாக்கமுடியும் என்பது தெரிய வருகிறது.

ஒரு நேர்மையான கலைஞன்,சமுகப் பொறுப்புள்ள படைப்பாளி ஒரு போதும் சமுக விரோத சக்திகளிடம் சமரசமாக மாட்டான்!

எந்தமாதிரி பின்வாங்கியுள்ளார்கள் என்று கவனிக்க வேண்டும்.’’காசு கொடுத்தா ஷாப்பிங் கூட போகலாம்’’ என்ற ஒரு சாதாரண நிதர்சனத்தை தான் – அதுவும் அனைவரும் அறிந்த உண்மையைத் தான் – சொல்லியுள்ளனரேயன்றி,வேறு எந்த புரட்சிகரமான வசனத்தையோ,புடலங்காயையோ சொல்லிவிடவில்லை!

அதற்கே ஒரு அந்தர்பல்டி என்றால் எப்படி?

‘’எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ,யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்படவில்லை.இது,சிலரது மனதை புண்படுத்துவதாகத் தெரிய வந்ததால்,படத்திலிருந்து நீக்கப்படுவதாகத் தெரிவித்துக் கொள்கிறோம்!”

அதாவது, சசிகலா மனதை புண்படுத்தியதால் இந்த வசனத்தை எடுத்துவிடுகிறோம் என்று நேர்மையாக ஒத்துக் கொள்ளக் கூட தயக்கம்…..!

நாளை, ரஜினி ஆட்சிக்கு வந்தால் ஒரு ஊழல் அரசியல்வாதியை அல்லது பொதுப் பணத்தை திருடியவனை கைது செய்தால் அவர்களது மனம் புண்பட்டுவிடக் கூடும் ,ஆகவே கைது செய்யாதேர்கள்…’’ என்று காவல்துறைக்கு உத்தரவிடுவாரோ…என்னவோ!

நிஜத்தில் அல்ல, சினிமாவில் கூட ஒரு நிதர்சன உண்மையை சொல்வதில் இவ்வளவு கோழைத்தனம் இருக்குமென்றால்…,
இப்படியான ஒருவரை முகமுடியாக்கிக் கொண்டு, பின்னிருந்து அவரை இயக்கி ஆளலாம் என்ற சக்திகளின் சரியான சாய்ஸ்தான் ரஜினிகாந்த்!

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response