அதிமுக மூத்த நிர்வாகியும், தமிழக சட்டமன்ற முன்னாள் தலைவருமான பி.எச்.பாண்டியன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் காலமானார்.
கடந்த 1985 முதல் 89 வரை சட்டப்பேரவைத் தலைவராகப் பதவி வகித்தார். 1980 முதல் 85 வரை சட்டப்பேரவை துணைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் பிறந்த இவர், சேரன்மகாதேவி தொகுதியிலிருந்து 1977, 80, 84 ம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.
நெல்லை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும்,அதிமுகவில் அமைப்பு செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
எம்.ஜிஆர் மரைவு, ஜெயலலிதா மறைவு ஆகிய முக்கியமான காலகட்டங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர் மறைவின் போது இவர் ஜானகி அணியில் இருந்தார். ஜெ மறைவுக்குப் பின் சசிகலாவுக்கு எதிர் அணியில் இருந்தார்.
எனக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று சொன்னவர். அதனாலேயே பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றவர்.