
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி இந்தியன் மக்கள் மன்ற தலைவரும் பத்திரிகையாளருமான வாராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதேபோல, வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவரும் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகளை அவசர வழக்குகளாக நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் நேற்று இரவு 9.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்தனர். அப்போது அரசு தரப்பில் அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், மனுதாரர் சார்பில் ஜானகிராமன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆஜரானார்கள்.
அப்போது நடந்த வாதத்தில்…
அரசு பிளடர்:- தி.மு.க. சார்பில் பேரணி நடத்த அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை காவல்துறையினர் பரிசீலித்தனர். பின்னர், இந்தப் பேரணியில் கொடும்பாவி எரிக்கப்படுமா? வன்முறை நடைபெற வாய்ப்பு உள்ளதா? என்பது உள்பட 21 கேள்விகளைக் கேட்டு கடந்த 19-ந் தேதி தி.மு.க.வுக்குக் கடிதம் அனுப்பினர். இதில், முக்கிய கேள்விகள் உள்பட பெரும்பாலான கேள்விகளுக்கு பொருந்தாது என்ற பதிலை தி.மு.க. தரப்பில் அளித்துள்ளதால், பேரணி நடத்த அனுமதி வழங்க மறுத்து காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
நீதிபதிகள்:- காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. சார்பில் வழக்கு ஏதாவது தொடரப்பட்டுள்ளதா?
அரசு பிளடர்:- இல்லை. இதுவரை வழக்கு தொடரவில்லை.
இவ்வாறு தொடர்ந்த வாதங்களின் முடிவில், ‘ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் ஊர்வலம், பேரணி நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுபோன்ற போராட்டத்தைத் தடுக்க முடியாது. அதேநேரம், பொதுமக்களுக்கும், பொது சொத்துக்கும் எந்தப் பாதிப்பும் வரக்கூடாது. எனவே, அசம்பாவிதம் நடந்தால், தகுந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் திங்கட்கிழமை (இன்று) பேரணி செல்லும் இடங்கள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்யவேண்டும். இதற்காக பறக்கும் கேமராக்களையும் அப்பகுதியில் பயன்படுத்த வேண்டும். ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்ததால் அதற்கு தலைவர்களை பொறுப்பாளிகளாக்க வேண்டும்’ என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.
இதன்மூலம் காவல்துறை அனுமதி மறுப்பை மீறி பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதோடு இந்த அனுமதிக்காக திமுக எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. திமுக பேரணி நடத்தக்கூடாது என்று விரும்பியவர்கள் மூலமே திமுக பேரணிக்கு அனுமதி கிடைத்திருக்கிறது என்கிறார்கள்.
