ஈழத் தமிழர்கள் இந்துமதத்தினர் அல்ல – பாஜக அரசு அறிவிப்பு

மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ச.பாலமுருகன், ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி எழுதியுள்ள பதிவு….

இந்திய பாராளுமன்றத்தில் இன்று 9.12.2019 ல் குடியுரிமை திருத்தச் சட்டம் விவாதத்திற்கு வருகிறது. இந்தச் சட்டம் இந்தியாவின் மதச் சார்பின்மை கருத்தைப் புதைக்க உள்ளது.

பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் முஸ்லீம் இல்லாதவர்களை இந்திய குடியுரிமை வழங்க வழி வகை செய்துள்ளது.

தமிழர்களாகிய நமது முக்கிய கோரிக்கையான 1983 க்கு பின்னர் இலங்கையிலிருந்து வந்து பல்வேறு முகாம்களில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இந்தியாவையே வாழிடமாக ஏற்றுக்கொண்டவர்கள்.இங்கேயே வாழ விரும்புபவர்கள்.

2014 ஆண்டு டாடா சமூக ஆய்வு நிருவனமும், டேனிஸ் அகதிகள் கவுன்சிலும் இணைந்து நடத்திய ஆய்வில் 79 % அகதிகள் இந்தியாவை தாயகமாக கருதுவது வெளிப்பட்டது. இந்தியாவோடு தொப்புள் கொடி உறவுள்ள இம் மக்களுக்கு இந்தியக் குடியுரிமை தர வேண்டும் என பல ஆண்டு கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு வந்தது.

இச் சூழலில் கடந்த 2016 ஆண்டு பா.ஜ.க கொண்டு வந்த இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வந்ததால் பின் பாராளுமன்றம் நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.7.1.2019 அக் குழு உறுப்பினர்கள் ஈழத் தமிழர்களையும், திபத்திய புத்த மத அகதிகளுக்கும் குடியுரிமை தரலாம் என பரிந்துரைத்தனர்.

ஆனால் மத்திய உள் துறை அமைச்சகம் தாங்கள் குடியுரிமை வழங்குவது குறித்து 29.12.2011 தேதியிட்ட ஒரு நிலைப்பாட்டு நடைமுறையை கடைபிடிப்பதாகவும் (standing operative procedure) அதன் படி வெளிநாட்டைச் சார்ந்த போரால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட கால விசாவில் இங்கே தங்கிக் கொள்ளலாம் குடியுரிமை வழங்க முடியாது எனக் கூறி ஈழத் தமிழர்களை குடியுரிமைச் சட்டத்தில் இணைக்கவில்லை.

ஆனால் இதற்கு முரணாக பாக்,ஆப்கான்,பங்களாதேஷ் என்ற நாடுகளின் (வெளிநாட்டினர்) முஸ்லீம் அல்லாதாரை மட்டும் குடியுரிமை தர சட்டம் கொண்டு வருவது தமிழ்ச் சமூகத்திற்கு செய்யும் அநீதியாகும்.
காஷ்மீரிகளை பாராளுமன்றம் மூலம் அநீதி செய்ததற்கு இணையானது.

ஈழத் தமிழர்கள் படிப்பு,வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். சுய மரியாதை இழந்துள்ளனர்.அகதிகளாய் இருப்பதால் இந்த கூடுதல் அவலம்.

சில மாதங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.சாமிநாதன் தன் தீர்ப்பில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமையை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தார்.

மதத்தால் மக்களின் குடியுரிமை முடிவு செய்வதில் எந்த சிறு உடன்பாடும் கிடையாது. ஆனால் ஒரு வாதத்திற்காக ஈழ மக்களில் உள்ள இஸ்லாமியவர்கள் இல்லாதோருக்கு அல்லது “அக் மார்க்” இந்துக்களுக்கு கூட பா.ஜ.க குடியுரிமை மறுப்பதேன்? தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் அவ்வளவு வன்மமா?

தி.மு.க அதன் கூட்டணிக் கட்சியினர் இந்தச் சட்டத்திருத்தத்தைத் தடுக்கவில்லை என்றால் அது பெரும் வரலாற்றுப் பிழையாக மாறும். அ.தி.மு.க மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்யவில்லை என்றாலோ அல்லது இந்தச் சட்டத்தைப் பற்றி புரிதலின்றி வழக்கம் போல துதி பாடினாலோ அதுவும் வரலாற்றுப் பிழையாகும்.

ஈழத் தமிழர்களை தேர்தல் இலாபத்திற்கு மட்டும் பார்க்கும் அவல நிலையால் இந்த அவலம் வந்துள்ளது.

மனித உரிமைப் பார்வையில் ஈழத் தமிழ் அகதிகளின் இந்தியக் குடியுரிமைக்குக் குரல் கொடுங்கள்!

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response