அறிவியல் சார்ந்த தமிழர் விழா கார்த்திகை தீபம் – கவிஞர் பச்சியப்பன் பெருமிதம்

கார்த்திகை திருநாளையொட்டி பேராசிரியர் கவிஞர் பச்சியப்பன் எழுதியுள்ள கட்டுரை…..

தமிழர்களின் முதன்மையான விழாக்களில் ஒன்று கார்த்திகை திருநாள் ஆகும்.

பொங்கல் திருவிழாவும் கோடைக்கால அம்மன் திருவிழாக்களும்கார்த்திகை திருவிழாவும் 80 களுக்கு முன்புவரை தமிழர்களின் கொண்டாட்டமான திருவிழாக்கள்.

சித்திரை மாதம் தொடங்கி ஆடி மாதம் வரை ஊர் ஊராக நாடகம் பார்க்கிற பேரானந்தம் அம்மன் திருவிழாக்கள் தந்தன.

தைமாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை ஊர்தோறும் மஞ்சுவிரட்டு விழாக்களில் கலந்துகொள்ள துடியாய் துடிக்கும் மகிழ்வை தைத்திருநாள் தந்தது.

மழைக்காலம் முடிந்து தூரல் பிசுபிசுக்கும் குளிர்காலத்தில் வருவது கார்த்திகை திருவிழா.

கார்த்திகை திருவிழா மூன்று நாள் கோலாகலமாக நடக்கும்.

ஊரே ஒளியால் அழகு பெறும். பெண்கள் கும்மியடித்து பாட்டுப் பாடுவார்கள் . பெண்கள் உருவாக்கும் வட்டத்தில் நடுவே அமர்ந்தபடி நாங்கள் எல்லாம் உடன் பாடி மகிழ்வோம். இடுப்பில் செம்மறி ஆட்டின் மணிகளை கட்டிக்கொண்டு தொரட்டுக்கோலை ஏந்தியபடி வீதிகளில் ஒலி எழுப்பியபடி ஓடுவோம். தெருவெல்லாம் மாவலி சுற்றிக் கொண்டிருப்பார்கள் அதனை தட்டிவிட்டு வம்பு செய்தபடி ஓடுவது பெரும் உற்சாகம்.

பெரிய கார்த்திகை நாட்டுக் கார்த்திகை கொல்லைக் கார்த்திகை என்று மூன்று நாள் கொண்டாட்டம்.

வீடுகளில், சாமியார் மாலையில் தீபம் ஏற்றுவது பெரிய கார்த்திகை.

நீர்நிலைகளில் கோயில்களில் தீபம் ஏற்றுவது நாட்டுக் கார்த்திகை.

கழனிகளில் குப்பை மேடுகளில் விளக்கேற்றுவது கொள்ளைக் கார்த்திகை.

மூன்றாம் நாள் திருவிழாவின் போது சொக்கப்பானை கொளுத்துவார்கள். நடுவில் நட்டு வைத்திருக்கும் வன்னிமரத்தை தீயின் இடையே ஓடி வெட்டுகிற சடங்கு நடக்கும். சொக்கப் பனை எரிந்து முடிந்த பிறகு அதில் இருக்கிற எரிந்த குச்சிகளைக் கொண்டு போய் வயலில் நடுவதும் அவரை கொடி பூசணிக்கொடி போன்றவற்றில் நடுவதும் வழக்கம். அப்படி நட்டு வைத்தால் விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை. இந்தத் திருவிழாவில் நிலம் செழிப்பதற்கான சடங்குமுறைகள் அதிகம்.

கார்த்திகை மாதத்தில் தெருவெல்லாம் ஒளிபெற கூட்டு நடவடிக்கையான தீபம் ஏற்றுவது ஊரெல்லாம் பரவி இருந்த காலம் அது. அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது இடத்தில் விளக்குகள் கவனமாக போடுகிற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தெருவெல்லாம் விளக்கேற்றி ஊரெல்லாம் வெளிச்சமாய் வைத்திருக்கிற காலத்தை எண்ணிப் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

அந்த விழா இன்று சிறு சடங்காகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஊடகங்களால் விளைந்த கேடுகளில் ஒன்று தீபாவளி பண்டிகையை தமிழர் பண்டிகையாக மாற்றியது ஆகும்.

கார்த்திகைத் திருவிழா வை தமிழர்கள் பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டும். தமிழக அரசு இந்நாளில் விடுமுறை அறிவிக்க வேண்டும் . இது ஏதோ திருவண்ணாமலைக்கு உரிய விழா என்பதுபோல ஒரு மாவட்ட அளவில் சுருக்குவது ஏற்புடையது ஆகாது.

அண்மைக்காலமாக
தமிழர்களின் நம்பிக்கைக்கு எதிராகப் பல காரியங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழர்களின் நம்பிக்கையைக் குலைப்பதில் தான் சிலர் குறியாக இருக்கிறார்கள். அதை எல்லாம் தமிழர்கள் பொருட்படுத்தாமல் தமிழர் விழாக்களில் உள்ள பொருள் பொதிந்த உண்மைகளை உணர்ந்து கொண்டாட வேண்டும்.

மருத்துவர் வேலாயுதம் ஒருமுறை கூறினார் காற்றில் உள்ள நுண்ணிய கிருமிகளை சொக்கப்பானை அல்லது மாவொளி போன்ற நெருப்புப் பொறிகள் அழிக்கிற உண்மையை தமிழன் உணர்ந்திருக்கிறான் என்றார்.

இது வெறும் விளையாட்டுச் சடங்கு அல்ல அதற்குள் மருத்துவமும் இருக்கிறது என்று கூறுகிறார். மழைக்காலங்களில் வருகிற பல்வேறு தொற்றுக்கிருமிகளை அன்றைக்கு களைந்து குழந்தைகளையும் முதியவர்களையும் காக்கிற ஒரு அறிவியல் உண்மையை உணர்ந்து இந்த விழாக்களில் செய்திருக்கிறார்கள்.

இப்படி பல ஆயிரம் நுட்பங்கள் நம்மிடம் உள்ளன அதனை உணர்ந்து இந்த விழாக்களைக் கொண்டாட வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்கள் இந்த விழாவினைக் கொண்டாடி இருக்கிறார்கள் என்று சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

அகநானூற்று 141 ஆவது பாடல் இந்த கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடியதற்கான சான்று பகர்கிறது. பொருள் தேடப் போன தலைவன் கார்த்திகை திருவிழா நாளைக் கொண்டாடுவதற்காக அவன் வருவான் என்று தோழி தலைவியிடம் உரைப்பதாக இந்தப் பாடல் கூறுகிறது.

களவழி நாற்பது என்ற நூல் கார்த்திகை சாற்று என்று இந்த விழாவிற்குப்பெயர் உரைக்கிறது. இப்படி பண்டைய இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகிற இந்த விழாவினை தமிழர்கள் மறவாதிருக்க வேண்டும். பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டும் தீபாவளி போன்ற பண்டிகை ஒதுக்கிவிட்டு கார்த்திகைத் திருநாள் போன்ற தமிழர் விழாக்களைக் கொண்டாட வேண்டும்.

அனைவருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்.

அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும்
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின;
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது

உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,
மழை கால்நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!
…. ….. …… …..
(அகநானூறு)

Leave a Response