இலட்சக்கணக்கானோரை நாடற்றவராக்கும் புதிய சட்டம் – நாம் தமிழர் கட்சி கண்டனம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெற்ற மனித உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கில் மாநிலம் முழுவதிலுமிருந்து மனித உரிமை ஆர்வளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையின் சார்பில் டிசம்பர் 8 2019 ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மனித உரிமை ஆர்வலர்களும், நாம் தமிழர் கட்சியினரும் பெருமளவில் கலந்து கொண்டனர். அப்பாசறையின் பொறுப்பாளர்களான மதுசூதனன், திருமதி.சிவசங்கரி ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

இந்தக் கருத்தரங்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து மனித உரிமை ஆர்வலரும், டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான பாரிவேந்தன் கலந்துரையாடினார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான ராஜீவ்காந்தி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் குறித்து விவரித்தார். கல்வி உரிமைச் சட்டம் மற்றும் புதிய கல்விக்கொள்கை குறித்து கல்வியாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் எடுத்துரைத்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினக் கருத்தரங்கின் இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1: குடியுரிமைச் சட்ட திருத்த வரைவு மசோதா

பிறநாட்டு மதச்சிறுபான்மை ஏதிலிகளைப் பாதுகாக்கிறோம் எனும் பெயரில் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் வண்ணம் இந்திய ஒன்றிய அரசு கொண்டு வரும் மத அடிப்படையிலான குடியுரிமைச் சட்டத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தியாவிலுள்ள இலங்கையைச் சார்ந்த மதச்சிறுபான்மையினரான ஈழத்தமிழர்களை இந்தச் சட்டத்திருத்தத்தின் கீழ் கொண்டு வராததின் அடிப்படையில் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதை இந்திய ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்கிறது என்பதையும் இந்த அவை சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தீர்மானம் 2: தேசிய குடியுரிமைப் பதிவேடு

இந்திய ஒன்றிய அரசு நாடு முழுமைக்கும் கொண்டு வரத் திட்டமிடும் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டின் மூலம் இலட்சக்கணக்கான மக்களை நாடற்றவர்களாக மாற்றும் மனிதாபிமானமற்ற திட்டத்தை இந்த அவை வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 3: காசுமீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள்

காசுமீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை இந்த அவை வன்மையாகக் கண்டிப்பதுடன், காசுமீர் மக்கள் அவர்களின் சொந்த மண்ணில் சுதந்திரமாக அனைத்து உரிமைகளையும் பெற்று நிம்மதியாக வாழச் சர்வதேசச் சமுதாயம் குரல் கொடுக்க வேண்டுமென இந்த அவை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4: பல்வந்த் சிங் ரஜோனாவின் தூக்குத்தண்டனையை ரத்து செய்தல்

எப்பொழுது வேண்டுமானாலும் தூக்கிலிடப்படலாம் என்ற நிலையில் கடந்த 24 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் சீக்கியர் பல்வந்த் சிங் ரஜோனாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் அத்தூக்குத் தண்டனையை உடனடியாக ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ஒன்றிய அரசையும், பஞ்சாப் மாநில அரசையும் இந்த அவை வற்புறுத்துகிறது.

தீர்மானம் 5: 29 ஆண்டுகளாக சிறையில் வாடும் எழுவரை விடுதலை செய்தல்

ஆயுள் தண்டனை பெற்று 29 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள முருகன், நளினி, சாந்தனு, பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்களை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் படி தமிழ்நாடு அரசின் அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்று அவர்களை உடனே விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு ஆளுநரையும், இந்திய ஒன்றிய அரசையும் இந்த அவை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6: மனித உரிமைப் போராளி கிலானி மறைவுக்கு இரங்கல்

சிறைவாசிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கிப் போராடி வந்த மனித உரிமைப் போராளி பேராசிரியர் சையது அப்துல் ரஹ்மான் கிலானி அவர்களின் மறைவு மனித உரிமை போராட்டக் களத்திற்கான பேரிழப்பு என்பதை இந்த அவை வருத்தத்துடன் பதிவு செய்கிறது.

தீர்மானம் 7: தமிழ்நாடு அரசு அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோருதல்

நீண்டகாலமாகத் தமிழகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் இந்த அவை கோருகிறது.

தீர்மானம் 8: ஈழத்தமிழர்கள் கவலையுறும் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல்

தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை முன்னின்று நடத்திய கோத்தபய ராஜபக்சே இப்போது இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள நிலையில் அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் எவ்வித அச்ச உணர்வுமின்றி சுதந்திரமாக வாழும் நிலையை ஏற்படுத்திடச் சர்வதேசச் சமூகம் உதவுமாறு இந்த அவை கேட்டுக் கொள்கிறது.

Leave a Response