ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முழுமையாக வரி கட்டி 6 மாதங்களுக்குப் பிறகு, அன்றாட நிர்வாக பொறுப்பில் இல்லாத என் மீது வழக்கு தொடுப்பது ஏன் என்று சன் குழும தலைவர் கலாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து சன் குழும தலைவர் கலாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த பல ஆண்டுகாலமாக நானும், என்னைச் சார்ந்த நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ ரூ.600 கோடிக்கும் மேல் வருமான வரித்துறைக்கு செலுத்தி வருகிறோம். மேலும் அதிகமான அளவில் சேவை வரி, மற்றும் தானாக முன் வந்து(Voluntary) வரி செலுத்தியதற்காகவும், துறையுடன் ஒத்துழைக்கும் உணர்வோடு செயல்பட்டதற்காகவும் வருமான வரி, சேவை வரித்துறை 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளுக்கான நற்சான்று விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இப்போது திடீரென ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடுத்து, அதற்காக எனக்கு ‘சம்மன்’ அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
‘‘ஸ்பைஸ் ஜெட்’’ நிறுவனத்தில் நான் அலுவல் பொறுப்பில்லாத தலைவராகத்தான்(Non executive chairman of the board) இருந்தேன். ஒரு நிறுவனத்தின் கணக்கு-வழக்கு, வரி செலுத்துதல் போன்ற அன்றாட அலுவல் விவகாரங்களில் அலுவலக பொறுப்பில்லாத தலைவர் ஈடுபடுவது கிடையாது என்பது விவரம் அறிந்த அனைவருக்கும் தெரியும்.மேலும் வருமான வரித்துறையால் குறிப்பிடப்பட்டுள்ள 2013-14 மற்றும் 2014-15 நிதி ஆண்டுகளுக்குப் பிடிக்கப்பட்ட டிடீஎஸ்(TDS) வரிகள் முற்றிலுமாக 2015ம் ஆண்டு பிப்ரவரிக்குள் கட்டப்பட்டு விட்டது. பாக்கி எதுவுமில்லை எனவும் ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.இங்கே வரி ஏய்ப்பு ஏதும் நடைபெறவில்லை. செலுத்தப்பட வேண்டிய தொகை அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாகக் காலம் தாழ்த்தி கட்டப்பட்டுள்ளது என்பதே உண்மை நிலை. உரிய நேரத்தில் கட்ட இயலாது போனபோது, இது குறித்து வருமான வரித்துறையுடன் நிறுவனத்தினர் பேசி, கால அவகாசம் பெற்று அந்தத் தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறேன்.
இந்நிலையில், வருமான வரித்துறை திடீரென இந்த விவகாரத்தில் செலுத்தப்பட வேண்டிய வரி முழுமையாக செலுத்தப்பட்டு 6 மாதம் கடந்த நிலையில் வழக்கு தொடர்ந்திருப்பதும்-அதில் அலுவல் பொறுப்பில்லாத தலைவராக (Non executive chairman)விளங்கிய அன்றாட நிர்வாகப் பொறுப்பில் பங்கு வகிக்காத என்னைத் தொடர்புபடுத்தியிருப்பதின் உள்நோக்கம் என்ன என்பது புரியவில்லை.சமீபகாலமாக அரசுத்துறைகள் எல்லாம் ஏதோ உள்நோக்கோடு எனக்கும், என்னைச் சார்ந்த நிறுவனங்களுக்கும் எதிராக முடுக்கிவிடப்பட்டு பலவிதமான அவதூறு செய்திகள் வெளியிட்டு மிரட்டிடும் பாணியில் செயல்படுவது ஏன் என்று விளங்கவில்லை.இத்தகைய கைமுறுக்கும்(Arm twisting), நிகழ்வுகளுக்கு காரணம் என்ன? இவை எல்லாம் யாரைத் திருப்திப்படுத்த என்பதும் விளங்கவில்லை. இறுதியாக இந்த விவகாரங்களை சட்டப்படி சந்தித்து நீதியை-நியாயத்தை பெறுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் கூறியுள்ளார்.