உழவர்களை ஓட்டாண்டியாக்கும் புதிய சட்டம் – கி.வெ சாடல்

தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் கி. வெங்கட்ராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

வேளாண் விளை பொருள்கள் பதப்படுத்தும் பெரு நிறுவனங்களுக்கும், அப்பொருட்களை விளைவிக்கும் உழவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் செய்து கொண்டு, “ஒப்பந்த சாகுபடி” செய்வதற்கு தனிச்சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு இயற்றியிருக்கிறது. “தமிழ்நாடு வேளாண் விளைபொருள்கள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் – (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) சட்டம் – 2019” என்று தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள இந்தப் புதிய சட்டம், உழவர்களை ஓட்டாண்டியாக்கும் சூதான திட்டமாகும்!

வேளாண் உற்பத்தியாளர்களும், கால்நடை வளர்ப்போரும், அது தொடர்பான பெரிய தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வேளாண்மையில் ஈடுபடுவது என்று இச்சட்டத்தில் கூறப்படுகிறது. சாகுபடியின் தொடக்க காலத்திலேயே நெல், பருத்தி, வாழை உள்ளிட்ட விளை பொருள்களுக்கு விற்பனை விலையை தீர்மானித்து ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது இதன் சாரமாகும்.

அதேபோல், கால்நடை வளர்ப்போர் பால் உள்ளிட்ட அதன் விளை பொருள்களை விற்பனை செய்து கொள்வதற்கு இவ்வாறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, உத்திரவாதமான சந்தையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

இதன் உண்மையான நோக்கம், வேளாண் விளை பொருள் கொள்முதல் பொறுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாடு அரசு விலகிக் கொண்டு, சந்தையை முற்றிலும் தனியார் வசமாக்குவதுதான்!

ஏற்கெனவே, இந்திய அரசின் சாந்தக்குமார் குழு வேளாண் விளை பொருள் கொள்முதலிலிருந்தும், அதற்கு அடிப்படை விலை தீர்மானிப்பதிலிருந்தும் அரசு விலகிக் கொள்ள வேண்டுமென 2015இல் பரிந்துரைத்து, அதனை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ஒப்பந்த வேளாண்மை மேற்குலக நாடுகளில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. அதற்குக் காரணம் – அமெரிக்கா, பிரிட்டன், செர்மனி போன்ற நாடுகளில் 1,000 ஏக்கர் – 5,000 ஏக்கர் என்ற அளவுள்ள பெரிய பண்ணைகளே இருக்கின்றன. 200 ஏக்கர் கொண்ட வேளாண் உற்பத்தியாளரைக் கூட அந்நாடுகளில் பார்ப்பது கடினம்.

பெரும் பண்ணை நடத்துபவராக இருப்பதினால், அந்த உற்பத்தியாளர்கள் உணவுப் பதப்படுத்தும் தொழில் உள்ள பெரு நிறுவனங்களோடு சம வலுவில் பேரம் பேசி தங்களது விளை பொருள்களுக்கான இலாப விலையைத் தீர்மானித்துக் கொள்ள முடியும்.

ஆனால், தமிழ்நாட்டில் சராசரி நிலவுடைமை – இரண்டரை ஏக்கர்தான்! 2 ஏக்கரிலிருந்து 15 – 20 ஏக்கர் வரையிலுள்ள உழவர்கள் சம வலுவோடு, தனியார் நிறுவனங்களிடம் தங்கள் விளை பொருளுக்கான விலையை பேரம் பேசி பெற்றுவிட முடியாது. இச்சூழல் நிலவுவதால்தான், இங்கு அரசுக் கொள்முதல் நிலையங்கள் அதிகம் தேவை, வேளாண் விளை பொருட்களுக்கு அரசாங்கமே அடிப்படை விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன.

சந்தையின் ஓட்டத்திற்குள் உழவர்கள் சிக்க வைக்கப்பட்டால், அவர்களது விளை பொருட்களுக்கு இலாப விலை பெறவே முடியாது.

எனவே, உழவர்களை நசுக்கி – பெரு நிறுவனங்களுக்கு சந்தையை உறுதிப்படுத்தும் ஒப்பந்த முறை சாகுபடிச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழக உழவர் முன்னணி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டு உழவர்கள், ஒப்பந்த சாகுபடி என்ற சதிவலையில் சிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response