உருவானது புதிய புயல் – தமிழகத்தில் கனமழை தொடரும்

வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் (30/10/19) இரவு 9-30 மணி அளவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது….

குமரிக்கடல் பகுதியில் நிலவிவந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று மதியம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலை புயலாக மாறியது. இதற்கு ‘மகா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் இலட்சத்தீவுகளை நோக்கி நகர்ந்து திருவனந்தபுரத்துக்கு வடமேற்கில் 320 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தீவிர புயலாக மாறும்.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில், குமரி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, கோவை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்கள் மாலத்தீவுகள், லட்சத்தீவுகள், தென்கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரள கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இப்பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். கடற்காற்று மணிக்கு 65 கி.மீ முதல் 75 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். சமயத்தில் அது 85 கி.மீ வேகத்திலும் வீசும்.

சென்னையைப் பொறுத்தவரை மிதமான மழை இருக்கும்.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Leave a Response