தீபாவளி பட்டாசு வெடிக்க 6 விதிமுறைகள் – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், தீபாவளி திருநாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தீபாவளித் திருநாளில் தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனை பெரும்பாலான பொதுமக்கள் கடைப்பிடித்தனர். இதனால் கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் மாசு குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு வருகிற 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொல்லியிருக்கிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது….

1.தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

2.அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளைத் தவிர்க்க வேண்டும்.

3.மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4.குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

5.சுற்றுச்சூழலைப் பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

6.மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்தப் பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Response