மேகதாது திட்டம் – தமிழகத்திற்கு இழைக்கப்படும் வஞ்சனை என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்….
மேகதாது அணையைக் கட்டுவதற்கு தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெறவேண்டியதில்லை என கா்நாடக அரசு அறிவித்திருக்கிறது.
வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரைத் தடுத்து நிறுத்தவே
இந்த அணை கட்டப்படுவதாக கர்நாடகம் தந்திரமாகக் கூறியுள்ளது.
இதே காரணங்களுக்காக 1962 ஆம் ஆண்டில் ஒகெனக்கல் அறிக்கையில், நமது எல்லைக்குள்
நாம் கட்டவிருந்த அணை திட்டத்திற்குக் கா்நாடகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையொட்டி, இந்திய அரசும், திட்டக்குழுவும் அதற்கு ஒப்புதல் தரவில்லை. எனவே, அத்திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.
காவிரி வெள்ள நீரைச் சேமிக்கவேண்டுமானால் தமிழ்நாட்டின் ஒகெனக்கல், ராசி மணல் திட்டங்களுக்கு இந்திய அரசு ஒப்புதல் கொடுக்கவேண்டும். மேகதாது திட்டத்தை நிறுத்தவேண்டும்.
1924 ஆம் ஆண்டில் இரு மாநிலங்களுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கும், உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கும், இந்திய அரசின் நெறிகாட்டுதலுக்கும் இந்த அறிவிப்பு எதிரானதாகும்.
காவிரிப் படுகை மாநிலங்களில் ஏதாவது ஒன்று புதிய பாசனத் திட்டம் அல்லது மின் உற்பத்தித் திட்டம் மேற்கொள்ளவேண்டுமானால், மற்ற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறவேண்டுமென மேற்கூறப்பட்ட உடன்பாடு, தீர்ப்பு, நெறிமுறை ஆகியவைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளன. அதற்கெதிராக கர்நாடகம் செயல்படுவதை இந்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.
அதைபோல இப்போது கா்நாடகம் கட்டவிருக்கும் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. கர்நாடகத்தில் பா.ச.க. அரசு இருப்பதினால், இந்திய அரசு
ஒரு சார்புநிலை எடுக்குமானால்
அது தமிழகத்திற்கு இழைக்கப்படும் வஞ்சனை ஆகும்.
இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.