இந்தியாவின் இன்றைய நிலை – பெரிய வெங்காயம் கொள்ளை

பெரிய வெங்காயம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இதனால் இங்கிருந்து வெங்காய வரத்து குறைந்துவிட்டதால், திடீர் விலை ஏற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் நுகர்வோர் துறை புள்ளிவிவரங்கள்படி, சில்லறை விலையில் பெரிய வெங்காயத்தின் விலை டெல்லியில் கிலோ ரூ.80 ஆகவும், மும்பையில் ரூ.70 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.50 ஆகவும், சென்னையில் ரூ.50 முதல் ரூ.60 ஆகவும் விற்கப்படுகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்புவரை ஒரு கிலோ பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 வரை விற்பனையான நிலையில், திடீரென ரூ.80 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்தநிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் பதுவா பகுதியில் கடைகளுக்கு சில்லறை விற்பனை செய்வதற்காக குடோனில் பெரிய வெங்காயம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வியாபாரி ஒருவர் வெங்காயத்தை சேமித்து வைத்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று இரவு வெங்காய குடோனை உடைத்து உள்ளே இருந்த வெங்காயத்தை ஒரு கும்பல் அள்ளிச் சென்றுள்ளது. இதுகுறித்து வெங்காய வியாபாரி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வெங்காயம் திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

திருடிச் செல்லப்பட்ட வெங்காயத்தின் மதிப்பு 8 லட்சம் ரூபாய் என தெரிய வந்துள்ளது.

Leave a Response