பெண்ணுரிமைப் போராளி’ மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நாள்.

‘பெண்ணுரிமைப் போராளி’ மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நாள்

27.6.1962
19ஆம் நூற்றாண்டு தொடக்க காலத்திலும் கூட இசை வேளாளர் சாதியைச் சேர்ந்த பெண்களுக்கு பருவம் அடையும் முன்பே, கடவுளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுவார்கள். கோயில் குருக்களாகிய பிராமணர்கள் இத் தேவதாசிகளின் கழுத்தில் தாலி கட்டுவார்கள். அந்தப் பெண் பருவம் அடைந்தவுடன் சடங்குகள் சில செய்து கடவுளுக்கு அடிமையானவள் என்று அறிவிக்கப்படுவாள். அதன் பிறகு எல்லோரும் ‘தேவரடியாள்’ என்று அழைத்திடுவர். சனாதனவாதிகள் பார்வையில் இவர்கள் ‘நித்ய சுமங்கலி’ ஆவார்கள்.

அத்தகைய இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்து பெண்களை இழிவு செய்யும் தேவதாசி முறைக்கு எதிராகப் போராடியவர் தான் இராமாமிர்தம் அம்மையார்.

மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில் 1883ஆம் ஆண்டு பிறந்த இராமாமிர்தம் அவர்களின் தந்தை பெயர் கிருஷ்ணசாமி. தாயார் பெயர் சின்னம்மாள். இராமாமிர்தம் குழந்தையாக இருந்த போதே குடும்பத்தை காப்பாற்ற வழியின்றி தந்தையார் வீட்டை விட்டு பிரிந்து விடுகிறார்.

வறுமையையும், நோயையும் பரிசாகப் பெற்ற தாயாருக்கு ஐந்து வயது நிரம்பிய இராமாமிர்தத்தை வளர்க்க முடியவில்லை. பத்து ரூபாய்க்கும், பழைய புடவைக்கும் ஆசைப்பட்டு மற்றொரு தேவதாசிப் பெண்ணாகிய ஆச்சிக்கண்ணுக்கு விற்று விடுகிறார். ஆச்சிக்கண்ணு வளர்ப்பில் இராமாமிர்தம் குமரியாகிய போது சுயம்பு பிள்ளை என்கிற சங்கீத ஆசிரியர் ஒருவரை மணம் முடித்தார்.

இராமாமிர்தம் அம்மையார் தேவதாசி ஒழிப்பை முதன்மை இலக்காக கொண்டு செயல்பட்டு வந்த நிலையில் 1920ஆம் ஆண்டு காந்தியார் மீது ஈர்க்கப்பட்டு காங்கிரசு பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார். காந்தியார் இவரின் பணியைப் பாராட்டி எழுதிய கடிதத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்தார். அக்கடிதத்தை அவர் நாள்தோறும் பூசை செய்யத் தவறவில்லை.

இராமாமிர்தம் அம்மையார் 1925இல் மயிலாடுதுறையில் இசை வேளாளர் மாநாடு ஒன்றினை கூட்டினார். அதில் பல தேவதாசிப் பெண்களை அழைத்து வந்து பொட்டுத் தாலிகளை அறுத்தெறியச் செய்ததோடு மறுமணமும் செய்துவித்தார்.
அப்போது அந்த மாநாட்டில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. பங்கேற்று “பெண்ணுலகில் நேர்ந்த வழுக்கலைப் போக்க வந்த கற்பகம்” என்று பாராட்டிப் பேசினார்.

தேவதாசி முறையை அடியோடு ஒழிக்கப் பாடுபட்ட காந்தியத் தொண்டர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாகச் செயல்பட்டார். காங்கிரசு பேரியக்கத்தில் சில சனாதனவாதிகள் தீண்டாமை, தேவதாசி முறை, குழந்தை திருமணம் விதவை திருமணம் மறுப்பு ஆகியவற்றை ஆதரித்து வந்ததைக் கண்டு உள்ளம் கொதித்தார். 1925இல் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய போது இவரும் வெளியேறினார்.

அதன்பிறகு பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். 1938இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டார். திருச்சி உறையூர் தொடங்கி சென்னை கடற்கரை வரை நடைபெற்ற இந்தி எதிர்ப்பு நடை பயணத்தில் பங்கெடுத்து 577 மைல்கள் கால் கடுக்க நடந்து சென்றார். சென்னையில் இந்தி எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டு ஆறுமாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1949இல் பெரியார் மணியம்மையை திருமணம் செய்தபோது பொருந்தாத் திருமணம் என்று குற்றஞ்சாட்டி அவருடைய இயக்கத்திலிருந்து விலகினார். அதன் பிறகு தி.மு.க.வில் அண்ணாவோடு இணைந்து செயல்பட்டார். இராமாமிர்தம் தேவதாசிகளின் அவல வாழ்க்கையை சித்தரிக்கும் “தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்” என்னும் நூலினை எழுதி வெளியிட்டார். அதில், “பிரிட்டானியத்தையும், பார்ப்பனியத்தையும் கூட எளிதில் எதிர்க்கலாம், ஆனால்இந்த தேவதாசிமுறையை எதிர்ப்பது சாமானிய வேலை அல்ல” என்பதை அழுத்தந் திருத்தமாக குறிப்பிட்டார். இந்நூல் பெண்ணியம் போற்றுவோர் பலரால் பாராட்டப் பெற்றது.

தன்வாழ்நாளின் இறுதிப்பகுதியை மயிலாடுதுறையில் கழித்து வந்த இராமாமிர்தம் அம்மையார் 27.6.1962இல் இந்த மண்ணை விட்டு மறைந்தார்.

பெண்ணுலகில் நேர்ந்த வழுக்கலைப் போக்க வந்த கற்பகம் இராமாமிர்தம் வாழிய, வாழியவே! -கதிர்நிலவன்.

Leave a Response