தலைமை நீதிபதி தஹில் ரமானி சிக்கல் – பழ.நெடுமாறன் கண்டனம்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை…..

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
விஜயா கமலேஷ் தஹில்ரமாணி அவர்களின் பதவி விலகல் நீதித்துறையில் மட்டுமல்ல, மக்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மிக மூத்த நீதிபதிகளில் ஒருவரும், 75 நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்த ஒருவரை, மூன்று நீதிபதிகளை மட்டுமே கொண்ட மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றியிருப்பது வெறும் இடமாற்றமல்ல, அவருக்கு விதிக்கப்பட்ட பதவியிறக்கமாகத் தோற்றம் அளித்துள்ளது என்று
கருதுவது தவறாகாது.

மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் பதவி வகித்தபோது,“குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரத்தின்போது பிக்கீஸ் பானு என்ற முஸ்லீம் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதோடு அவரும்,அவருடைய குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 11பேருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்ததோடு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளடங்கிய 7 பேர் விடுதலை செய்ததை ரத்து செய்து அவர்களுக்கும் தண்டனை விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பினை அளித்தார்”.

இந்தப் பின்னணியில்,அவருடைய இடமாற்றப் பிரச்சனை பார்க்கப்படும்போது..உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவும், அரசியல் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்துவிட்டதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தையும், அறத்தையும் நிலைநிறுத்தவேண்டிய நீதித்துறையிலேயே
இத்தகைய தவறுகள் இழைக்கப்படுவது வேண்டாத விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

Leave a Response