ஆச்சி மசாலா குறித்த செய்தியும் மறுப்பும்

சமையலுக்கான மசாலா பொருட்கள் தயாரிக்கும் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவில் கலக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆதலால் கேரளாவில் ஆச்சி நிறுவனத்தின் பொருட்களைத் தடை செய்துள்ளதாகச் செய்தி பரவியது.

ஆச்சி தயாரிப்புகள் குறித்து வெளியான செய்திக்கு அந்நிறுவனம் விடுத்துள்ள மறுப்பு….

06-09-2019 சென்னை. ஆச்சி மசாலா பொருட்கள் அனைத்தும் தரத்திற்கு உத்தரவாதம் கொடுப்பவை என ஆச்சி மசாலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆச்சி மசாலா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கேரளாவில் ஆச்சி மிளகாய் பொடியில், சில மருந்துகள் கூடுதல் அளவில் இருந்ததாகக் கூறி, அவை உணவு பாதுகாப்பு முறையால் தடை செய்யப்பட்டுள்ளதாக தவறான செய்தி சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும், திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது.

இது முற்றிலும் தவறான தகவல். ஆச்சி மசாலா நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும், தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல், தமிழரின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.

ஆச்சி மசாலா தயாரிப்புகள் தொடர்பாக, எந்தவித தரக்கட்டுப்பாட்டு சோதனைக்கும், அதை இந்தியாவில் எங்கு நடத்தினாலும் சந்திப்பதற்கு தயாராக இருக்கின்றோம். ஆச்சி மசாலா நிறுவனத்தின் நோக்கமே, தரமான பொருட்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான். அதை பன்னெடுங்காலமாக ஆச்சி மசாலா நிறைவாக செய்து வருகிறது.

அந்த வகையில், மசாலா தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் தரத்தை உறுதி செய்த பிறகே, தயாரிப்புகள் வெளிவருகின்றன.

தரம் என்றாலே ஆச்சி, ஆச்சி என்றாலே மசாலா, என்ற வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் தான் ஆச்சி மசாலா தயாரிப்புகள் இருக்கின்றன.

ஆச்சி மசாலா நிறுவனத்தின் பேச்சும் மூச்சும் எப்போதும் தரத்தை நோக்கியே இருக்கும். ஆச்சியின் தயாரிப்புகளும் தரமாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response