தமிழ்த் தேசியர்களுக்கு கி.வீரமணி விடுக்கும் கருத்தியல் எச்சரிக்கை

தந்தை பெரியார் கூறும் ஆரிய எதிர்ப்பைப் புறந்தள்ளி, வெறும் தமிழ்த் தேசியத்தை மட்டும் முன்னெடுத்தால், அது இந்துத்துவா பாசிச சக்திகளால் எளிதாக அறுவடை செய்யப்படும் – எச்சரிக்கை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

பன்மதங்கள், பல மொழிகள், பல (கலாச்சாரங்கள்) பண்பாடுகள் கொண்ட இந்தியாவை ஒரே மதம் – ஹிந்து மதம், ஒரே மொழி – பார்ப்பன சமஸ்கிருதம், ஹிந்தி, ஒரே பண்பாடு – ஆரிய வேத மத சமஸ்கிருதப் பண்பாட்டினைத் திணிக்கும் ‘ஹிந்துத்துவா’ கொள்கையை, தனது நீண்ட காலக் கனவுத் திட்டங்களை – மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு இன்று அதற்குக் கிடைத்துள்ள மிருக பல பெரும்பான்மை மூலம், நாடாளுமன்றத்தில் 35 நாள்களில் 32 மசோதாக்கள் நிறைவேற்றம் என்பது போன்று நாளும் செய்து வருவது கண்டு ஜனநாயக உலகம் திகைத்துப் போய் உள்ளது!

வடக்கின் வாடைக் காற்றைத் தடுக்கும் தமிழ்நாடு

நம்மைப் பொறுத்தவரை, தந்தை பெரியார் மண்ணாகவும், 100 ஆண்டு பாரம்பரியம் மிக்க சமுகநீதிக் கட்சிகளும், சுயமரியாதை திராவிடப் பண்பாடு என்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதும், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற மனிதத்தை நிலை நிறுத்திடும் பண்பாட்டுத் தளமாகவும், சமத்துவமும் சுயமரியாதையும் என்றும் பூத்துக் குலுங்கி, காய்த்துக் கனிந்துள்ள பண்பட்ட மக்கள் உள்ள நிலமாக தமிழ்நாடு விளங்குவதால், வடக்கின் வாடைக் காற்றை, தமிழ்நாடு தடுத்து நிறுத்தியது.

அதற்கு ஒரே காரணம் பெரியார் என்ற மாபெரும் கொள்கை – லட்சியம் மாபெரும் தடுப்பு மருந்து ஆகும்.

இதை இன எதிரிகள் புரிந்துகொண்டதால்தான் முதலில் மூலாதாரமான பெரியார் என்பதின் பெரிய பிம்பத்தையே உடைத்துச் சுக்கல் நூறாக்கலாம் என்று நினைத்து, முயற்சித்தனர். அது காற்றை விதைத்து, புயலை அறுவடை செய்த கதை ஆயிற்று.

தமிழ்நாட்டு இளைஞர்கள், வாலிபர்கள், மகளிர், முதியோர் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ளவர்கள், விவரம் தெரிந்தவர்கள் விடியல் பெரியார்’ என்ற தத்துவத்தால்தான், மருத்துவரால் தான் இந்த புற்றுநோயை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திட முடியும் என்று கண்டறிகின்றனர்!

இன உணர்வு, மொழி உணர்வு, உரிமைகள், சமுகநீதி – இடஒதுக்கீடு போன்றவை அறிவுப்பூர்வ உரிமைப் போராட்டத் தளங்கள். அவைகளில் திராவிட உணர்வினை அகற்றிவிட முடியாது என்று கண்டறிந்தே ஆர்.எஸ்.எஸ். ஆரிய வேத மத கலாச்சார விற்பனையாளர்கள் தங்களுக்குள்ள பண வசதி, அதிகார பலம், ஊடக பலம், எளிதில் விலை போகும் வீபிடணத் திருக்கூட்டம் இவைகளைப் பயன்படுத்தி உணர்ச்சிக்குத் தீனி போடும், கடவுள், மத உணர்வு, திருவிழாக்கள் – இவைகள்மூலம் பக்தி போதைப் பொருள்களைத் தந்து மயக்கி வீழ்த்திடத் திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.

உண்மை கலப்பற்ற பொய் மூட்டைகளை, அவதூறுகளைப் பரப்ப ஒரு படையே பணியாற்றுகிறது!

ஆரியத்தின் மும்முறை அணுகுமுறைகள்

எதிர்த்து அழிக்கப்பட முடியாத தத்துவங்களை, எதிரிகளை, அணைத்து அழித்து விடுதல் மூலம் செய்ய முனைந்துள்ளனர். இது புத்தர் காலத்திலிருந்தே ஆரியத்தால் தொடங்கப்பட்டு கையாளப்பட்டு வரும் – வியூகம் ‘‘Appreciate, Accept, Annihilate”, என்று மூன்று வஞ்சக முறைகள். முதலில் பாராட்டு, அடுத்து அதை ஏற்றுக் கொள்வது போல் ஊடுருவல், கடைசியில் அணைத்து அழித்து விடுதல் என்று முப்பெரும் முறைகளைக் கையாளுவார்கள். ஆரிய சனாதன வேத மதமான பேதத்தின் பேருருவான ஹிந்து ஆரிய மதத்தின் பிறவி எதிரியான புரட்சியாளர் அம்பேத்கருக்கு விழா எடுப்பது, போற்றிப் புகழ்வது, அணைத்து செயல்படுவதும் இன்றைய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. போக்காகும்.

அதுபோலவே இறுதியில் மாறி மதச்சார்பின்மை, சமுக நீதிக்குக் குரல் கொடுத்த காந்தியாருக்கு 150 ஆம் ஆண்டு கொண்டாடி அவரையும் அணைத்துக் கொண்டும் தமது வரலாற்றினை மாற்றி புது முகமூடி அணிகிறார்கள்.

தந்தை பெரியாரிடம்தான் நெருங்க முடியவில்லை. மலைகளில் எரிமலையிடம் எப்படி ஆரியம் நெருங்கும்?

புதுப்புது உத்திகள், இராமாயண கால கற்பனையான மாரீச மான்களை “அனுப்பவும்” ஆயத்தமாகினர்.

தவறாகப் பயன்படுத்தப்படும் தமிழ்த் தேசியம்

திராவிடம் தமிழுக்கு எதிரி, திராவிடம் பேசுவோர் தமிழர் விரோதி என்று ஆரியமே சடகோபம்’ சாத்தி சிலரைக் கிளப்பி விட்டுள்ளனர். திராவிடம் என்பது வெறும் நிலப்பரப்பாகுமா? அது அழியாத சமத்துவம், சுயமரியாதை என்பதுதான் திராவிடம் – மீள் வரலாற்றை அது மட்டும் தான் தர முடியும் – ஆரியத்தை வீரியத் துடன் வீழ்த்துவது – என்பது புரியாததனால் சில அப்பாவிகள் பெரியார் ஊட்டிய தமிழ்த் தேசிய உணர்வை திசைத் திருப்பி எதிரிகளை நண்பர்களாகவும், நண்பர்களை எதிரிகளாகவும் எண்ணி ஏமாறும் பரிதாப நிலை இருக்கிறது. அதுதான் மிகப்பெரும் ஆபத்து என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அண்மையில் அரண் என்கிற ஆய்வாளர் எழுதிய ஆர்.எஸ்.எஸ். இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்” என்ற ஒரு சிறு நூலில் இது வெகு தெளிவாகப் படம் பிடித்துக் காட்டப் பட்டுள்ளது.

தந்திரமாகக் காலூன்றும் இந்துத்துவ பாசிசம்!

இதோ அப்பகுதி:

ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பாசிச அமைப்பு, தமிழ்நாட்டில் மிகத் தந்திரமாக காலூன்றி வருகிறது. கபடி, சிலம்பாட்டம், சல்லிக்கட்டு போன்ற தமிழர் வீர விளையாட்டுகளை வைதிக இந்து மரபுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது.

திருவள்ளுவர், வள்ளலார், அம்பேத்கர் போன்ற ஆளுமைகளை இந்து வட்டத்துக்குள் அடைப்பது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல கூட்டங்களில் வேட்டி கட்டுதல் போன்ற தமிழரின் தனித்த பண்பாட்டைத் தன்வயப்படுத்தும் முயற்சியைத் தீவிரமாக செய்து வருகிறது.

தமிழ்நாட்டின் சிற்பங்கள், கோயில்கள், பக்தி இலக்கியங்கள், தொல்லியல், வரலாறு அனைத்தையும் தனக்குள் சேர்க்கப் பார்க்கிறது. இப்படித்தான் ஆரிய – வேத-சமஸ்கிருதப் பண்பாடு இந்திய துணைக் கண்டத்தின் அனைத்துக் கூறுகளையும் உள் வாங்கிக் கொண்டது. தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக சொல்லப்படும் அனைத்தும் ஆரிய வேத மரபின் நீட்சியாக உருவாக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் விழுங்க முடியாத ஒரே சக்தியாக தந்தை பெரியார் நம் மண்ணில் நிற்கிறார். அவரின் ஆரிய எதிர்ப்பைத் தவிர்த்து விட்டு தமிழ்த் தேசியக் கூறுகளைக் கட்டமைக்க முயற்சித்தால் இந்துத்துவ சக்தியால் எளிமையாக அறுவடை செய்யப்படுவோம்.

இதைத் தெளிவாக உணர்ந்த இந்துத்துவ சக்திகள் பெரியாரை தமிழ்த் தேசியத்தின் எதிரியாகத் திரிக்கும் வேலையை 2013 ஆம் ஆண்டில் இருந்து மிகத் தீவிரமாக செய்து வருகின்றன. இதைப் புரிந்து கொள்ளாமல் இன்றைய அரசியலை ஆராய முடியாது. இந்திய துணைக் கண்டத்தில் ஆரியர் அல்லாத ஒரு நாகரிகத்தின் அடையாளமாக விளங்கும் தமிழ்த்தேசிய இன மக்களின் மீது வீசப்படும் இந்துத்துவ திரிசூலத்தை பெரியாரின் கைத்தடி இல்லாமல் ஒருபோதும் எதிர் கொள்ளமுடியாது.”

இந்த எச்சரிக்கை காலத்தின் தேவை; ஏமாந்தால் இனம், மொழி, பண்பாடு நாகரிகம், சமத்துவம் எல்லாம் அழியும்.

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

14.8.2019

Leave a Response