ஓடாநிலையில் பதற்றம் – நாம் தமிழர் கட்சி வாகனங்கள் உடைப்பு

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவுநாள் ஆடிபெருக்கு விழாவாகவும் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று காலை அரசு சார்பில் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தீரன் சின்னமலை வாரிசுகளை கவுரவித்தார். மேலும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல்கட்சியினரும் தீரன்சின்னமலைக்கு மரியாதை செலுத்தினர்.

தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் வருடந்தோறும் ஆடி18 அன்று நாம்தமிழர் கட்சியின் சார்பில் வீரவணக்கம் செலுத்துவது வழக்கம்.

வழக்கம் போல் இன்று, நாம்தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் தலைமையில் ஈரோடு,திருப்பூர், கோவை,மாவட்டங்களில் இருந்து 15 க்கும் மேற்பட்ட மகிழுந்துகள் மற்றும் துள்ளுந்துகளில் நாம்தமிழர் கட்சியினர் வந்தனர்.

வாகனங்களை நிறுத்திவிட்டு, மணிமண்டபத்தின் உள்ளே சென்றிருந்த நேரத்தில் அக்கட்சியினரின் வாகனங்களில் இருந்த கட்சிக்கொடிகள் மற்றும் ஒட்டிகள் ஆகியன அடையாளம் தெரியாத நபர்களால் கிழிக்கப்பட்டது. அதோடு வாகனங்களையும் அடித்து உடைத்திருக்கின்றனர்.

தீரன்சின்னமலை சாதி மத அடையாளங்களைத் தாண்டிய தமிழ்த்தேசியப் பெரும்பாட்டன் என நாம்தமிழர் கட்சியினர் முழக்கமிட்டதால், அங்கு சுற்றியிருந்த சாதி அமைப்பினர்கள்தான் இதைச் செய்திருக்கக்கூடும் எனச் சொல்கிறார்கள்.

இதுதொடர்பாக அரச்சலூர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர்.

இதனால் அங்கு சில மணி நேரங்கள் பதட்டமாக இருந்தது.

– செல்வன்

Leave a Response