திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் கைது – சுபவீ கண்டனம்

கொளத்தூர் மணி தலைவராக இருக்கும் திராவிடர் விடுதலைக்கழகத்தின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் நிர்மல்குமார்(வயது 25). இவர்,ஜூலை 13 ஆம் தேதி மாட்டு இறைச்சி சாப்பிடுவது தொடர்பாக தன்னுடைய கருத்துகளை முகநூலில் பதிவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த மணி என்பவர் காட்டூர் காவல் நிலையத்தில் நிர்மல் மீது புகார் செய்தார்.
இதைத் தொடர்ந்து, காட்டூர் காவல்துறையினர், நிர்மல் குமார் மீது, மதங்கள், இனங்கள் தொடர்பாக உணர்ச்சியைத் தூண்டிவிடும் வகையிலும், பீதியைக் கிளப்பும் வகையிலும் கருத்துகளைப் பரப்புவது என்ற சட்டப்பிரிவு 505(2)-ன்படி வழக்குப்பதிவு செய்து அவரை ஜூலை 27 அன்று கைது செய்தனர்.

பின்னர் அவர் கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபு முன்னிலையில் நேர்நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து நிர்மல் குமாரை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நிர்மல்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிகழ்வுக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திவிக கோவை மாநகரச் செயலாளர் நிர்மல்குமாரை விடுதலை செய்க என்கிற கோரிக்கையுடன் ஜனநாயக மீட்புக் கூட்டியக்கம் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் ஜூலை 29 அன்று மனு அளித்துள்ளது.

அம்மனுவில், திவிக கோவை மாநகரச் செயலாளர் நிர்மல் முகநூலில் பதிவிட்டதாகச் சொல்லப்படும் கருத்தைக் காரணங்காட்டி கோவை மாநகர காவல்துறை தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து கைது செய்ததைக் கண்டித்ததோடு

நிர்மல் குமார் மீதான பொய் வழக்கை இரத்து செய்து அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தப்பட்டிருந்தது.

மனு அளிக்கும் நிகழ்வில்,தமிழ்நாடு திக காசு.நாகராசன்,திராவிடர் கழகம் மாரிமுத்து,திராவிடர் விடுதலைக் கழகம்அரிதாசு,எஸ்டிபிஐ பீர் முகம்மது,சிபிஅய் வி.சண்முகம்,மஜக முஸ்தபா,விசிக காதர் அலி,மனித உரிமைகள் இயக்கம் நித்தியா,ததேவிஇ சத்திய பிரபு,
தமிழ்நாடு மாணவர் மன்றம் சா.ஈ.கௌதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

முகநூலில் பதிவு செய்யப்பட்ட பதிவிற்காக நிர்மல்
கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து இயக்கங்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்து
கலந்தாய்வு கூட்டம் 29.07.2019 அன்று கோவை காந்திபுரம் படிப்பகத்தில் நடைபெற்றது.

அக் கூட்டத்தில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு, கு.இராமகிருட்டிணன்
பொதுச்செயலாளர் த.பெ.தி க, தவிக வெண்மணி
திக சிற்றரசு,ராஜா,பியூசிஎல் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கல்ந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆகஸ்ட் 1, புதன் மாலை 4 மணிக்கு தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் எதிரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

வடநாட்டிலிருந்த மதவெறி இப்போது தமிழ்நாட்டிற்கும் இறக்குமதி செய்யப்படுகின்றது. மாட்டிறைச்சி தொடர்பான வன்முறைகள், ‘போலோ ஜெய் ஸ்ரீராம்’ போன்ற அத்துமீறல்கள் என ஒவ்வொன்றாக இங்கும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

அதன் தொடர்ச்சியாகவே, திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாகத் திராவிடர் விடுதலைக் கழகம் எடுக்கும் முயற்சிகளுக்குப் பேரவை துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முற்போக்குச் சிந்தனையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, மதவாத, பிற்போக்குச் சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டிய தருணம் இது. வாருங்கள் இணைந்து போராடுவோம்!

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response