தமிழ் மொழியைக் குறைத்து மதிப்பிட்ட பாடத்திட்டம் நீக்கம்

ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் பாடதிட்டங்களை பள்ளிக்கல்வித் துறை மாற்றி அமைத்தது. புதிய பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய சில கருத்துகள் இடம்பெற்று இருந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கல்வித்துறை 19 பிழைகளை மாற்றி அமைக்க சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பனிரெண்டாம் வகுப்பு ஆங்கில பாடபுத்தகத்தில் தமிழ் மொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிடப்பட்டு இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. அதாவது, சமக்கிருதம் தமிழ் மொழியை விட தொன்மையானது என்ற அர்த்தத்தில் அந்தப் பாடத்தில் கருத்துகள் இடம்பெற்று இருந்தன.

தமிழ்நாடு முழுவதும் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புகளை முன்வைத்தனர்.

இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி, ஆங்கில பாடப்புத்தகத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட 13 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது பனிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அந்த சர்ச்சைக்குரிய பாடப்பகுதியை நீக்கச் சொல்லி அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாடத்திட்ட தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது….

2019-20 ஆம் கல்வியாண்டில் வெளிவந்துள்ள புதிய பாடத்திட்டம் 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடபுத்தகத்தில் அலகு-5, ‘தி ஸ்டேட்டஸ் ஆப் தமிழ் அஸ் ஏ கிளாசிகல் லாங்குவேஜ்’ என்ற பாடம் முழுவதையும் (பக்கம் எண்.142 முதல் 150 வரை) நீக்க பட்டியலிட்டு அனுப்பப்படுகிறது.

இது சார்ந்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் திருத்தப்பட்டியலை அனுப்பி மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கும்போது, பாட ஆசிரியர்கள் கடைபிடிக்கும்படி அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response