ரேசனிலும் கைவைக்கும் மத்திய அரசு – மண்ணின் மக்களுக்கு பொருள் கிடைக்குமா?

ஒரே நாடு – ஒரே தேர்தல், ஒரே நாடு – ஒரே கல்விக்கொள்கை என்ற திட்டங்களை அடுத்து ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.

தற்போது, பல்வேறு மாநிலங்களில் ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ‘ஸ்மார்ட் கார்டு’கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பெறுகின்றனர்.

ஏழை தொழிலாளர்கள் பலர் வேலை வாய்ப்புக்காக, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களிடம் ரேஷன் கார்டு இருந்தும் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்கும் வகையிலும், நாட்டின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையிலும், புதிய அரசு திட்டத்தை வகுத்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

அதன்பின் பஸ்வான் அளித்த பேட்டியில் கூறியதாவது:

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை ஓராண்டுக்குள் அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு எல்லா ரேஷன் கடைகளிலும் பாய்ன்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) இயந்திரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆந்திரா, அரியானா உட்பட சில மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் மட்டுமே பிஓஎஸ் இயந்திரங்கள் தற்போது உள்ளன.

இத்திட்டம் மூலம் வேலை வாய்ப்புக்காக நாடு முழுவதும் இடம் பெயர்ந்து செல்லும் மக்கள்தான் அதிகம் பயன் பெறுவார்கள். இத்திட்டம் அமலானால் அவர்கள், இனிமேல் நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கி கொள்ள முடியும். ஒரு ரேஷன் கடையை மட்டுமே அவர்கள் சார்ந்து இருக்க தேவையில்லை. இதன்மூலம், முறைகேடுகளும் குறையும். இத்திட்டத்தின் மூலம் 81 கோடி மக்கள் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அறிவிப்பை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மாநிலங்களவையிலும் நேற்று தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஒரே நாடு, ஒரே கார்டு’ திட்டம் மூலம் ஏழைகள் நாட்டில் எங்கு வேண்டுமானலும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ளலாம். மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்,’’ என்றார்.

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை விடுத்துள்ள அறிக்கையில், ‘ஒருங்கிணைந்த பொது விநியோக நிர்வாக (ஐஎம்பிடிஎஸ்) திட்டத்தையும் உணவுத்துறை அமைச்சகம் அமல்படுத்தும். இத்திட்டம் தற்போது ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் திரிபுராவில் அமலில் உள்ளது. இந்த மாநிலங்களில் வசிக்கும் மக்கள், எந்த மாவட்டத்திலும் ரேஷன் பொருள் பெற்றுக் கொள்ள முடியும். மற்ற மாநிலங்களும் ஐஎம்டிஎஸ் முறையை அமல்படுத்துவதாக உறுதி அளித்துள்ளன,’ எனக் கூறியுள்ளது.

இத்திட்டம் அமலானால் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வடமாநிலங்களிருந்து தமிழகம் வருகிற வட இந்தியர்கள் பயன் பெறுவார்கள். அதேசமயம் இங்கேயே காலம் காலமாக வசித்து வருகிற மக்களுக்குப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

Leave a Response