சிங்கள அரசுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம்.

ஏற்கெனவே சென்னையில் எடுத்த படம்.

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வலியுறுத்தி, பொதுமக்களிடம் 10 லட்சம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி மதுரையில் சனிக்கிழமை தொடங்கியது.

  தெற்காசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மைய உறுப்பினர் சரஸ்வதி தலைமை வகித்துப் பேசியதாவது:

  இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டு அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 70 ஆயிரம் தமிழர்கள் உள்நாட்டுப் போரில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இலங்கை அரசால் அமைக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம், அங்குள்ள தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை.

  இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் சூழல் மாறவில்லை. தற்போது, அங்கு பதவியில் உள்ளோர் பலரும் உள்நாட்டுப் போரில் தொடர்புள்ளவர்கள் தான்.

  அங்குள்ள தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்காக, இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இதற்கு, ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும். தமிழகத்தில் ஜூலை 15 ஆம் தேதிக்குள் 10 லட்சம் கையெழுத்துகள் பெற திட்டமிட்டுள்ளோம். இந்த கையெழுத்துப் பிரதிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

         இதில், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர், மதுரைக் கல்லூரி முதல்வர் முரளி, மதுரை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.கே. ராமசாமி, திரைப்பட இயக்குநர் வீரசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Response