நாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு

காவிரி உரிமை மீட்புக் குழுவின் சிறப்புப் பேரவைக் கூட்டம் 15.06.2019 அன்று மாலை தஞ்சை பெசண்ட் அரங்கத்தில், ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது.

காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த.மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் சி. முருகேசன், திருவாரூர் மாவட்டத் தலைவர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டத் தலைவர் சி.ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பல்வேறு கிராமங்களின் உழவர்கள் என திரளானோர் இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1

காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 28.05.2019 அன்று, புதுதில்லியில் கூடி 2019 சூன் மாதத்திற்குரிய 9.19 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிட வேண்டுமென்று ஆணையிட்டது. ஆனால், கர்நாடகம் அதைச் செயல்படுத்துவதற்கான அறிகுறி எதுவும் இல்லை! கடந்த 2018 திசம்பரிலிருந்து 2019 மே மாதம் வரை கர்நாடகம் திறந்துவிட வேண்டிய தண்ணீர் 19.5 ஆ.மி.க. ஆகும். அதைப் பற்றி ஆணையம் வாய்திறக்கவில்லை. அந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு சார்பில் சென்ற அதிகாரிகளும் எழுப்பவில்லை.

2018 – 2019 தண்ணீர் ஆண்டில், கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அம்மாநில அணைகளின் பாதுகாப்புக் கருதி அவர்கள் தேக்க முடியாமல் வெளியேற்றிய தண்ணீர் 130 ஆ.மி.க. என்றும், அந்நீரில் 2018 – 2019–க்கு கர்நாடகம் தர வேண்டிய மொத்த நீரையும் கழித்துக் கொள்ள வேண்டுமென்றும் கர்நாடகம் வாதிடுகிறது. கர்நாடகம் தேக்க முடியாத தண்ணீரை தமிழ்நாட்டாலும் தேக்க முடியவில்லை. இயற்கை பாதிப்புகள் ஏற்படும்போது, ஏற்படும் வெள்ள நீரை தேக்க முடியாத நிலையில், அதை சட்டப்படி தர வேண்டிய தண்ணீரில் கழித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்வது சட்டவிரோதமாகும்; காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரான வாதமாகும்!

இந்த வாதத்தை தமிழ்நாடு சார்பில் சென்ற அதிகாரிகள் ஆணையக் கூட்டத்தில் எழுப்பியதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டு அதிகாரிகள் அதுபற்றி செய்தி ஊடகங்களில் எதுவும் கூறவில்லை. தமிழ்நாடு அரசுத் தரப்பு காவிரி நீரைப் பெறுவதில் உரிய அக்கறை காட்டவில்லை; அழுத்தம் காட்டவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று!

அதேவேளை, ஆணையம் கூடி முடிவை அறிவித்த அதே நாளில் கர்நாடகத்தில் பாசன அமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆணையத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதா வேண்டாமா என்பதை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசித்தான் முடிவு செய்வோம் என அறிவித்தார். கர்நாடக எதிர்கட்சித் தலைவர் எடியூரப்பா ஆணையத் தீர்ப்பை செயல்படுத்தக் கூடாது என்று எச்சரித்தார். கர்நாடகத்தின் மண்டியா மாவட்டத்தில் கன்னடர்கள் பெங்களுர் சாலையை வழிமறித்து ஒரு மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தினர். ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் இன்றுவரை அமைதி காக்கிறார்கள்! எதிர்கட்சிகளும் அமைதி காக்கின்றன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி ஆணையத்தின் ஆணையையும் செயல்படுத்தி வைக்க வேண்டியது இந்திய அரசின் பொறுப்பு. இந்திய அரசோ, நயவஞ்சகமாக நடந்து கொள்கிறது. தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாட்டு அரசியல் நடத்துகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் முழுநேரம் செயல்படக் கூடிய அமைப்புகளாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்திய அரசு ஓரவஞ்சனையுடன் வெவ்வேறு பணிகளில் முழுநேரப் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளின் கூடுதல் பணியாக – ஓய்வு நேரப் பணியாக ஆணையத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் நிறுவியுள்ளது.

இப்பொழுது இந்த ஆணையம் 28.05.2019 அன்று வழங்கிய ஆணையையும் செயல்படுத்த இந்திய அரசு முன்வரவில்லை!

ஐட்ரோகார்பன் வேட்டை

காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களை பன்னாட்டு நிறுவனங்களும், ஓ.என்.ஜி.சி.யும் ஐட்ரோகார்பன் – நிலக்கரி வேட்டையாடும் இரசாயன மண்டலங்களாக ஒப்படைக்க முனைந்து செயல்படுகின்றன. அதற்கான அனுமதிகளை வழங்கி வருகிறது இந்திய அரசு. விழுப்புரத்திலிருந்து இராமேசுவரம் வரை பல இடங்களை ஏலம் விட்டுவிட்டார்கள். உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலை முதலாளி அகர்வாலின் வேதாந்தாவும், ஓ.என்.ஜி.சி.யும் களத்தில் இறங்கிவிட்டன. விளைந்த நிலங்களில் கெயில் குழாய்களை இந்திய அரசு பதித்துக் கொண்டுள்ளது.

தமிழர் வரலாற்றில் – பல்லாயிரம் ஆண்டுகளாக வேளாண் மண்டலமாக விளங்கக்கூடிய நிலங்களையும், ஆறுகளையும், கால்வாய்களையும், ஊர்களையும் நஞ்சு மண்டலமாக்கி வாழத் தகுதியில்லாத மண்ணாக்கி மக்களை வெளியேற்ற வேண்டுமென்பதே இந்திய அரசின் திட்டம்!

இந்திய அரசின் இந்த சூழ்ச்சித் திட்டத்தைப் புரிந்து கொண்ட மக்கள் அங்கங்கே குழாய் பதிப்பதை எதிர்த்து அறவழிப் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களையெல்லாம் கைது செய்வது, அவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப் போடுவது என்ற அடக்குமுறையை தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள். ஐட்ரோகார்பன் அபாயத்தை விளக்கி – விளை நிலங்களில் கெயில் குழாய் பதிப்பதை கைவிடக் கோரி துண்டறிக்கைக் கொடுப்பவர்களைக் கூட கைது செய்து சிறையில் அடைக்கிறது தமிழ்நாடு அரசு!

எனவே, இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் காவிரி நீர் வராமல் தடுத்துவிட்டால், விவசாய மக்கள் நிலங்களைக் கைவிட்டுவிட்டு – ஊர்களை காலி செய்து கொண்டு வெளியேறி விடுவார்கள் என்று கூட்டாகத் திட்டம் தீட்டுகிறார்கள் என்று புரிகிறது.

வாழ்வா? சாவா?

இன்று நம்முன் வாழ்வா, சாவா என்ற கேள்வி நிற்கிறது. நாம் வாழப் பிறந்தவர்கள். நாம் வாழ்வுரிமைதான் கேட்கிறோம். நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, உளுந்து, பயிறு, வெற்றிலை, மரத் தோப்புகள் முதலியவையெல்லாம் நாட்டின் வளர்ச்சிக்குரியவைதான்! மனித வாழ்வுக்கு இன்றியமையாத தேவைகள்தான்! எனவே, நம் பக்கம் நீதி இருக்கிறது. நேர்மை இருக்கிறது. நாம் வாழப் பிறந்தவர்கள். நம்முடைய வாழ்வுரிமையைக் காப்பாற்ற நாம் வீதிக்கு வந்து போராட வேண்டுமென்று வரலாறு நம்மை அழைக்கிறது!

நம்மில் சிலர் மட்டும் வந்து பிரதிநிதிகளாகக் கலந்து கொள்ளும் போராட்டமாக நடத்தினால் போதாது! ஐட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைப் பெற்றுத்தர வலியுறுத்தியும் பல போராட்டங்கள் நடத்தி விட்டோம். அனைத்து மக்களும் கலந்து கொள்ளக்கூடிய போராட்டமாக இனி நாம் நடத்த வேண்டும்.

வரும் 2019 சூலை 2 – செவ்வாய்க்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை காவிரி டெல்டா மாவட்டங்கள் அனைத்திலும் கிராமங்கள் அளவில் பெருந்திரள் காத்திருப்புப் போராட்டம் நடத்துவதென காவிரி உரிமை மீட்புக் குழுப் பேரவை ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

இந்தப் போராட்டத்தை நடத்துவதென்று இன்றைக்கு இங்கே கூடியுள்ள காவிரி உரிமை மீட்புக் குழுவின் சிறப்புப் பேரவை ஒருமனதாக முடிவு செய்கிறது. எந்த வேறுபாடும் இன்றி, அனைத்துத் தமிழ் மக்களும் இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு அழைக்கிறது!

தீர்மானம் 2

இராசிமணல் அணை கோரிக்கை தமிழ்நாட்டு உரிமைக்கு எதிரானது!

காவிரியின் குறுக்கே கர்நாடக – தமிழ்நாட்டு எல்லைக்கு அருகில் இராசிமணல் என்ற இடத்தில் புதிதாக நீர்த்தேக்கம் கட்ட வேண்டுமென்று தமிழ்நாட்டில் சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கை தமிழ்நாட்டிற்கு மிகவும் பாதகமானது!

இராசிமணல் என்ற இடத்தில் காவிரியின் இடதுகரை தமிழ்நாட்டு எல்லையிலும், வலதுகரை கர்நாடக எல்லையிலும் இருக்கிறது. ஆற்று எல்லைப் பகிர்வின்படி காவிரியின் ஒரு பாதி தமிழ்நாட்டிலும் மறுபாதி கர்நாடகத்திலும் இருக்கிறது. இந்த இடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அணை கட்ட வேண்டுமென்று கோரிக்கை எழுப்புகிறார்கள். இதற்கு ஒருபோதும் கர்நாடகம் ஒப்புதல் தராது! ஒருவேளை, அந்த இடத்தில் அணை கட்டினால் தேங்கும் தண்ணீர் தமிழ்நாட்டுப் பகுதியிலும் இருக்கும், கர்நாடகப் பகுதியிலும் இருக்கும். இந்த இராசிமணல் அணையின் நீர்த்தேக்கப் பரப்பு எவ்வளவு, நீர் கொள்ளளவு எவ்வளவு என்ற விவரம் எதையும் அணை கட்டக் கோருவோர் வெளியிடவில்லை.

அடுத்ததாக, மேட்டூருக்கு மேலே புதிதாக ஒரு நீர்த்தேக்கம் தேவையில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும். மேட்டூருக்கு மேலே ஒரு நீர்த்தேக்கம் வேண்டும் என்பது கர்நாடகம் மேக்கேத்தாட்டில் அணைகட்டுவதற்கு கருத்தளவில் ஆதரவு தெரிவிப்பதாகவே அமையும். மேட்டூருக்கு மேலே அப்படியொரு அணை தேவையே இல்லை.

ஏனெனில், மேட்டூர் அணை அடிக்கடி நிரம்பி வெள்ளம் கடலுக்குப் போவதில்லை. எப்பொழுதுதாவது 8 ஆண்டுக்கு ஒருமுறை – ஐந்தாண்டுக்கு ஒருமுறைதான் மேட்டூர் அணை நிரம்புகிறது. மேட்டூர் அணை நிரம்பி வெள்ளம் வெளியேறும் காலங்களில் கூட எல்லா சமயத்திலும் பெருமளவுக்குக் கடலுக்குக் காவிரி நீர் போகவில்லை. ஓரளவே செல்லும். 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் 100 டி.எம்.சி. (ஆ.மி.க.)க்கு மேல் கடலுக்குப் போகிறது.

இந்த வெள்ள உபரி நீரைப் பயன்படுத்துவதற்குத்தான், கரூர் மாவட்டம் – மாயனூலிருந்து வைகை – குண்டாறு வரை 255 கிலோ மீட்டர் நீளக் கால்வாய் அமைக்கும் “காவிரி – வைகை ஆறுகள் இணைப்புத் திட்டம்” செயல்படுத்தப்படுகின்றது. கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் வழியாகச் செல்லும் இக்கால்வாயால் சற்றொப்ப 8 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் இம்மாவட்டங்களின் குடிநீருக்கும் பயன்படவுள்ளது. இதற்கான பணிகள் நடந்து கொண்டுள்ளன.

சோழர்கள் காலத்திலிருந்து உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரிகள், காவிரிப்பாசனப் பகுதியில் பராமரிப்பின்றி காடு மண்டிக் கிடக்கின்றன. பல ஏரிகளைச் சொல்லலாம். எடுத்துக்காட்டாக – செயங்கொண்டம் அருகே இராசேந்திரசோழனால் அமைக்கப்பட்ட பொன்னேரி என்று அழைக்கப்படும் சோழகங்கம் ஏரி சீர்குலைந்து கிடக்கிறது. 26 கிலோ மீட்டர் நீளமும் 5 கிலோ மீட்டர் அகலமும் இந்த ஏரியின் பரப்பு. இந்த ஏரிக்குக் கொள்ளிடத்திலிருந்து நீர் கொண்டு வருவதற்காக அறுபது மைல் தொலைவுக்கு சோழர்கள் வெட்டிய கால்வாய் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கின்றது. இந்த ஏரிகளையெல்லாம் புத்துயிரூட்டி, ஆழப்படுத்தி வலுப்படுத்தினால் கணிசமாக வெள்ள நீரைத் தேக்க முடியும். ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றை தூர்வாரி ஆறுகளின் குறுக்கே அங்கங்கே தடுப்பணைகள் கட்டி நீரைச் சேமிக்கலாம்.

கடந்த 2018 செப்டம்பரில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், காவிரி ஆற்றின் கிளைகள் வழியாக – ஐந்து குழுக்களாகப் பிரிந்து கள ஆய்வு நடத்தி, எங்கெங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டுமென்று அறிக்கை தயாரித்து, அதனை தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சரிடம் வழங்கினோம்.

இதற்கப்பால், இயற்கையான வெள்ள நீர் ஓரளவாவது கடலுக்குப் போக வேண்டிய சூழலியல் பாதுகாப்புத் தேவையும் இருக்கிறது. எட்டு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு இடையே உள்ள மற்ற ஆண்டுகளில், காவிரியிலிருந்தும் காவிரியின் கிளை ஆறுகளிலிருந்தும் கடலுக்குத் தண்ணீர் போவதே இல்லை! கடலோர மீன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும். கடலின் உப்பு நீர் நிலத்தடியில் உள்நாட்டுப் பகுதியில் மேலும் மேலும் உள்ளேறி நிலத்தடி நீரை உப்பு நீராக மாற்றிவிடுகிறது.

அடுத்து, கடலியல் ஆய்வாளர்களின் கூற்று மிகவும் கவனிக்கத்தக்கது. ஆறுகளின் நீர் கடலில் கலப்பதை முற்றாகத் தடுத்துவிட்டால், கடல் நீர் மேலும் அதிக உப்பாகி விடும் என்றும், அதனால் தண்ணீர் ஆவியாக மாறுவது குறைந்துவிடும் என்றும், அதனால் மேகங்கள் முறையாக உருவாகாமல் மழை பாதிப்பு ஏற்படும் என்றும் கூறுகிறார்கள்.

எந்த வகையில் பார்த்தாலும் இராசிமணல் நீர்த்தேக்கம் என்பது தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது! மேக்கேத்தாட்டு அணை கட்ட வேண்டுமென்ற கர்நாடகத்தின் கருத்தை வலுப்படுத்தும் உத்தியாகவே இது அமையும். எனவே, இராசிமணல் திட்டத்தை முன்வைக்கும் நண்பர்கள் அக்கோரிக்கையைக் கைவிட வேண்டுமென்றும், தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் மக்களும் இக்கோரிக்கையை ஏற்க வேண்டியதில்லை என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

Leave a Response