தேர்தலில் தில்லுமுல்லு காங்கிரசு கேட்கவில்லை நான் கேட்பேன் – மம்தா அதிரடி

17 ஆவது மக்களவைக்கான 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றும் முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தீவிர பரப்புரை செய்தார்.

ஆனால், மேற்கு வங்காளத்தில் 42 தொகுதிகளில் 18 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. அனைத்துத் தொகுதிகளையும் வெல்லும் முனைப்பில் இருந்த திரிணாமுல் காங்கிரசுக்கு 23 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. இதனால் அதிர்ச்சி அடைந்தார் மம்தா பானர்ஜி.

இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் மம்தா பானர்ஜி அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று என்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தேன். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் என்னுடைய ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டனர்.

மேற்கு வங்காளத்தில் ஓட்டுகளைப் பெறுவதற்காக மதவாத பிரிவினையை மக்களிடையே பா.ஜ.க. தூண்டியது. பா.ஜனதா பெற்ற மிகப்பெரிய வெற்றி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது அல்ல.

பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் படைகள் எங்களுக்கு எதிராகச் செயல்பட்டன.

பா.ஜ.க.வின் தேர்தல் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் வெற்றிக்கு உதவுவதற்காக சில அமைப்புகளும், வெளிநாட்டு சக்திகளும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்காளத்தில் அவசர நிலையைப் போல் நெருக்கடியை உருவாக்கி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் கமி‌ஷன், ஊடகங்கள் போன்றவை பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் இருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்துள்ளது. இல்லாவிட்டால் மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் சமீபத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எப்படி படுதோல்வி அடையும். இது குறித்து காங்கிரஸ் கட்சி எதுவும் கேட்கவில்லை. ஆனால் நான் கேட்பேன். ஏனெனில் எனக்குப் பயம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response