மம்தா தலையை வெட்டினால் 11 இலட்சம் – மேற்குவங்கத்திலும் பாஜக ஆட்டம்

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டி, கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என பா.ஜ.க இளைஞர் அணியான பா.ஜ., யுவ மோட்சா தலைவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்கத்தின் பிர்பம் மாவட்டம் சூரி பகுதியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்ததாம். ஆனால் அப்பகுதியில் ஊர்வலம் செல்வதற்கோ, பொதுக்கூட்டம் நடத்துவதற்கோ காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. ஊர்வலத்தில் ஆயுதங்கள் ஏதும் பயன்படுத்தப்படாது என அளிக்கப்பட்ட உறுதியையும் காவல்துறை ஏற்கவில்லையாம்.

இதனால் தடையை மீறி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த தடியடி தாக்குதலுக்கு பா.ஜ., இளைஞர் அணி தலைவர் யோகேஷ் வர்ஷினே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். அவர்கள் பக்தர்கள் மட்டுமே. அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. மம்தா அரசு முஸ்லீம்களை திருப்திப்படுத்துவதற்காக இந்துக்களை குறிவைத்து அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார். மேலும் மம்தாவின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

தமிழகத்தைப் போல மேற்குவங்கமும் பாஜகவினருக்கு எட்டாக்கனியாக இருப்பதால் அங்கு வன்முறை வெறியாட்டங்களைத் தூண்டிவிடத் திட்டமிடுவதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response