நாம் தமிழர் கட்சி தனித்து நிற்பது ஏன்? – சீமான் மீண்டும் விளக்கம்

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் மே 4 இரவு 16 கால் மண்டபம் அருகே நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, வேட்பாளர் ரேவதியை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் சீமான் பேசியதாவது….

தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஏன் தனித்து நிற்கிறது? என்று நீங்கள் கேட்கலாம். அவர்களுக்கு மாற்று, இவர்களுக்கு மாற்று என்று கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

இலஞ்சம், ஊழல் ஒழிய வேண்டும் என்று வெறும் வார்த்தைகளாகப் பேசினால் மட்டும் போதாது. அதற்கு அ.தி.மு.க., தி.மு.க. அதிகார பலத்தை ஒழிக்க வேண்டும். நிலவளம் காக்கப்பட வேண்டும். நிலத்தில் முருங்கை, கொய்யா போன்றவற்றைச் சாகுபடி செய்து விவசாயத்தின் மூலம் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் பசி, பட்டினி இல்லாத நிலையை உருவாக்கலாம். ஆனால் இதுவரை ஆட்சி செய்தவர்கள் இதை எல்லாம் செய்தார்களா?

கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற அரசு துறையை தனியாருக்குக் கொடுத்து முதலாளிகளை ஊக்கப்படுத்துகிற நிலையை மாற்ற வேண்டும். இந்த மண்ணில் நீர் வளம், நில வளம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. இயற்கை என்ற செல்வம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

ஏழை-எளியோர் பயன்படுத்தக்கூடிய அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தி விட்டு, ஸ்கூட்டரை மானியத்தில் கொடுப்பதாக கூறுகிறார்கள். அது மக்களை ஏமாற்றும் வேலை.

கோவில் கருவறை முதல் பலவற்றிலும் தமிழகத்தில் இலஞ்சம், ஊழல் பெருகிக் கொண்டிருக்கிறது. கோவிலுக்கு சாமி கும்பிடும் போது தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக இலஞ்சமாக பணம் கொடுக்கிறார்கள். இதேபோல கருவுற்ற பெண், குழந்தையைப் பெற்றெடுக்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று கூறி தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள். எனவே அதிலும் இலஞ்சம், ஊழல் உள்ளது.

அரசின் அதிகாரம் மக்களுக்காக இருக்க வேண்டும். முதலாளிகளுக்காக இருக்கக் கூடாது. ஆடு, மாடு மேய்ப்பதைக் கிண்டல்-கேலியாக பேசக்கூடாது. மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களையும் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி குரல் கொடுக்கிறது. விவசாயத்தை அரசுப் பணியாக உருவாக்கும் நிலை வர வேண்டும். நாம் தமிழர் கட்சியால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முடியும். அதற்கு தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் அமோக ஆதரவைத் தர வேண்டும்.

இவ்வாறு சீமான் பேசினார்.

Leave a Response