இன்று முதல் கத்தரி வெயில் சென்னையில் அனல் காற்று – வானிலை மையம்

கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 29 ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் பெரிதும் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

அதே நேரத்தில் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

இது குறித்து வானிலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஃபனி புயலின் தாக்கத்தினால் எந்தவிதப் பாதிப்பும் இல்லை. துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை மணிக்கூண்டுகள் அகற்றப்பட்டுவிட்டன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும்.

ஒருவேளை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response