எல் ஐ சி யில் தொடரும் இந்தித் திணிப்பு — ஊழியர்கள் போராட்டம்.

வாழ்நாள் காப்பீட்டுக் கழகத்தில் (எல்.ஐ.சியில்) தொடர்ந்து இந்தித்திணிப்பு நடைபெற்றுவருகிறது. அதற்கு எதிராக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் போராடிவருகிறார்கள். மொழிப் பிரச்சினை என்பது அடிப்படையில் வாழ்வாதாரப் பிரச்சினையாகும். எல்.ஐ.சி நிறுவனத்துக்குள் உள்ள மொழிச் சூழல் என்ன?
1. அனைத்துக் காப்பீட்டுத் திட்டங்களின் பெயர்களும் சமஸ்கிருதத்தில் அல்லது சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்தியில்.
2. எல்லா படிவங்களும் இந்தியிலும் ஆங்கிலத்திலும்
3. காப்பீடு எடுப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால்தான் காப்பீடு படிவத்தில் நேரடியாக கையொப்பம் இடமுடியும். இல்லையென்றால் ஆங்கிலம் தெரிந்தவரிடம் கேட்டு புரிந்துகொண்டு கையொப்பம் இடுகிறேன் என்று கூறித்தான் கையொப்பம் இடவேண்டும். (உலகத்தில் எந்த நாட்டிலும் இந்த இழிநிலை இருக்காது. இந்த அடிமைப் புத்தி இருக்காது).
4. எல்ஐசியின் உள்ளூர் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கும்போது 50 சதவீத புத்தகங்கள் கட்டாயம் இந்தியில்தான் இருக்கவேண்டும் என்று நிர்பந்தம்.
5. அனைத்து நிறுவனத் தொடர்பும் இந்தியில்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது.
6. தமிழ்நாட்டில் உள்ள உயர் அதிகாரிகள் கூட (உதவிக் கோட்ட மேலாளர் பதவிக்கு மேல்) கையொப்பம் இடும்போது இந்தியில் மட்டுமே இடவேண்டும் என்று நிர்பந்தம்.
7. முக்கியக் கூட்டங்களின் முடிவுகளும் குறிப்புகளும் இந்தியில்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தம்
இப்படிப் பலவிதங்களில் தமிழ்நாட்டு எல்ஐசி ஊழியர்கள் மீது மொழித்திணிப்பு நடந்துவருகிறது. இது அவர்களது வேலை, பதவி உயர்வு விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதுதான் மத்திய அரசின் நோக்கமும். இந்திப் பேசுகிற ஊழியர்களுக்கு சாதகமாகவும் பிறருக்கு பாதகமாகவும் இருக்கும் மொழிக்கொள்கையைத்தான் இந்தியா நடைமுறைப்படுத்திவருகிறது என்பதற்கு எல்ஐசியைவிட பெரிய எடுத்துக்காட்டு ஏதுமில்லை.
எல்ஐசி ஊழியர்களே இன்று அதற்கு எதிராக களம் இறங்கியிருக்கிறார்கள்.

எல்.ஐ.சியில் இந்தித் திணிப்புக்கு எதிராகவும் தமிழைப் பயன்படுத்தக் கோரியும் போராட்டம்

தமிழ்நாடு வாழ்நாள் காப்பீட்டுக் கழக முற்போக்கு ஊழியர் சங்கம் நடத்தும் கண்டன ஆர்பாட்டம்.
இடம் – சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்
நேரம் – காலை 10 மணி 29.05.2015

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்மொழியுரிமைக் கூட்டியக்கம் ஆதரவு தெரிவித்திருக்கிறது.

Leave a Response