படித்த தலைவர் இப்படிச் செய்யலாமா? – மருத்துவர் இராமதாசை சாடும் பெண்

திராவிடக் கட்சிகளோடு எப்போதும் கூட்டணி கிடையாது என்று பா.ம.க நிறுவனர் ராமதாசு தொடர்ந்து சொல்லில்லொண்டிருந்தார். ஆனால் யாரும் எதிரபாராத வகையில், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

இதற்கு, பா.ம.க விலேயே பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மாநில இளைஞரணிச் செயலாளராக இருந்த ராஜேஸ்வரி பிரியா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், பா.ம.க-வில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.

தான் விலகியதற்கான காரணத்தை அவர் இன்று செய்தியாளர்கள் மத்தியில் விளக்கினார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஸ்வரி பிரியா,

என்னுடைய நோக்கம், இளைஞர்கள் இன்று அரசியல் கட்சிக்கு வரவேண்டுமென்றால், அவர்களுக்கு என்று தனி நிலைப்பாடு இருக்க வேண்டும். 2 கோடிக்கு மேல் இளைஞர்கள் வாக்களிக்கப் போகிறார்கள்.

அப்படி இருப்பதால் என்னைப்போல அரசியல்ல இருக்கிறவங்க என்ன பண்றாங்கன்னு பார்த்துக்கிட்டு இருக்காங்க. சோஷியல்மீடியா அதிகமானதுனால, எல்லோராலையும் கவனிக்கப்படுறோம். இன்று கூட்டணியும் அரசியலும் எப்படி இருக்குன்னா, ஓட்டுக்கான அரசியலாகவும் சந்தர்ப்பவாத அரசியலாகவும் பண்ணிக்கிட்டு இருக்கிறதால மக்கள் நல அரசியல் இல்லை.

மக்கள் நல்லா இருக்கணும்னு எந்த அரசியல் கட்சியும் நினைக்கல.
சிங்கப்பூரில் 8 ஆண்டுகள் இருந்துட்டு, இங்குவந்து ஒருவருஷம் பார்த்துட்டு சரி, ஒரு படித்த தலைவர், கொள்கைகள் இருக்கு, திட்டங்கள் இருக்குன்னு நான் பா.ம.க-வில் சேர்ந்தேன்.

அப்படி இருக்கும்போது, கட்சியை எவ்வளவு பெரிய இடத்துக்குக் கொண்டுபோக வேண்டும் என்று என்னால் முடிந்த அளவுக்கு என் உயிரைப் பணயம் வைத்துக்கூட பேசியிருக்கேன். எதைப்பத்தியும் நான் கவலைப்பட்டதில்லை.

உண்மையிலேயே எனக்கு நாட்டுப்பற்று அதிகம். நாடு இப்படி இருக்கே என்கிற வருத்தம் இருந்தது. தமிழ்நாடு இப்படி இருக்கு. எல்லா இடத்திலும் லஞ்சம் இருக்கு, வீதிக்கு வீதி டாஸ்மாக் இருக்கு. இது மாதிரி நிறைய வருத்தம் இருந்ததால்தான், எனது எட்டு வயது, ஆறு வயது குழந்தைகளை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தேன். ஒவ்வொரு மேடைக்கு வரும்போது, கடவுளுக்கு சேவை செய்கிறமாதிரிதான் வீட்டைவிட்டு வெளியே வருவேன்.

வாகனம் முதல்கொண்டு இரண்டு வருடமாக எனது சொந்தச் செலவில்தான் அனைத்தையும் பார்த்துக்கொண்டேன். எனது சொந்தச் செலவில்தான் இந்தக் கட்சிக்காக உழைத்திருக்கிறேன். அதனால், நான் எடுக்கிற முடிவு புனிதமானதாகவும் உன்னதமானதாகவும் இருக்கணும். நேர்மையான அரசியல் தமிழ்நாட்டுக்கு வரணும். நேர்மையான அரசியல் வரணும்னா, ஜல்லிக்கட்டில் எப்படி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஜெயிச்சாங்களோ, அதேமாதிரி தமிழக அரசியல்ல மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுட்டு வரணும்னுதான் நான் அரசியலுக்கு வந்தேன். அந்தச் சூழ்நிலையில்தான் பா.ம.க இதுவரைக்கும் நகர்ந்துகொண்டிருந்தது. நேற்று வரைக்கும் நான் நம்பிக்கையில் இருந்தேன்.

கூட்டணி சம்பந்தமாக இப்படி முடிவு எடுக்க மாட்டார்கள் என நினைத்தேன். ஐசியு-வில் இருக்கும் நம் இரத்த உறவு இருக்கும்போது என்ன நினைப்போம், டாக்டரெல்லாம் கைவிட்டால்கூட கடைசியில் அவுங்க உயிரோடு வெளியில வந்திடுவாங்கன்னு நினைப்போம்ல. அதேபோன்று ஓர் உணர்வு. எப்படியாவது திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லாம வந்திடுவாங்கன்னு ஒரு நம்பிக்கை இருந்துகிட்டு இருந்தது. இதனால்தான் நான் பொறுமையா இருந்தேன். எப்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்துவிட்டதோ என்னுடைய பொறுமை, உணர்வுகளை அடக்கிக்கொண்டு இருக்க முடியாது. அதனால் பா.ம.க-வில் இருந்து விலகிவிட்டேன்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response