40 ஓவரிலேயே நியூஸிலாந்தை சுருட்டி அபார வெற்றி பெற்ற இந்தியா

இந்திய மட்டைப்பந்தாட்ட அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி மவுன்ட் மாங்கனுயில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் தலைவர் கோலி பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இதனை தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். சிறப்பாக விளையாடி இருவரும் 25.2 ஓவர்களில் 154 ரன்களை எடுத்த போது தவான் ஆட்டமிழந்தார். 67 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் குவித்தார். 96 பந்துகளில் 87 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இதில் 9 பவுண்டரிள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். பின்னர் கேப்டன் விராட் கோலி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், அவர் தொடர்ந்து ராயுடு 47 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் டோனி, கேதர் ஜாதவ் அதிரடி காட்டினார். டோனி 33 பந்துகளில் 48 ரன்களையும் , கேதர் ஜாதவ் 10 பந்துகளில் 22 ரன்களை எடுத்தனர்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 324 ரன்களை எடுத்தது.

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து 40.2 ஓவரில்234 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது.

Leave a Response