திருவள்ளுவர் ஆண்டு 2050 – தமிழ்த் தேசியத் திருவிழா

திருவள்ளுவர் ஆண்டு 2050 பிறக்கிறது. தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்குத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா “முன் வாழ்த்து“ கூறட்டும். ஒரு குடியிற்பிறந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், தமிழ்த் தேச விடுதலை வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர் வாழும் நாடுகளிலெல்லாம் அனைத்துத் தமிழர்களும், சமய வேறுபாடின்றி தை முதல் நாளைக் கொண்டாடி வருவதால் இது தமிழ்த்தேசிய திருவிழா ஆகும். 2009 –முதல் இன்பப் பொங்கல் ஈழத்தமிழர்க்கு இன்றளவும் கண்ணீர் பொங்கலாக இருக்கிறது. கஜா புயலின் கொடூரத் தாக்குதலிலிருந்து இன்றளவும் மீட்கப்படாத காவிரிப்படுகை மக்களுக்கு இது துயரப் பொங்கல்!

உலகில் முன் தோன்றிய மூத்த குடி, வளமார்ந்த முதன் மொழிக்குச் சொந்தக்கார இனம், நீண்ட வரலாற்றையும், வளமார்ந்த பண்பாட்டையும் கொண்டு செம்மாந்து வாழ்ந்த இனம், தனி அடையாளமும், சிறப்பும், இருப்பும் கொண்டு விளங்கிய இனம், அத்தகு தமிழினம் இன்று வீழ்ந்து கிடக்கிறது. வாழ்வியலின் அனைத்து தளங்களிலும் – அரசியல், சமூகம், பண்பாடு, பொருளியல் என்ற அனைத்து தளங்களிலும் – வேற்றினத்தின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு கிடக்கிறது. தமிழினத்தை தட்டி எழுப்ப வேண்டிய தருணம் இது. தமிழகத்துக்கு அப்பாலிருந்து அடுக்கடுக்காக ஏவப்படும் திட்டங்களால் வகுக்கப்படும் கொள்கைகளால், வடிவமைக்கப்படும் சட்டங்களால், இடப்படும் கட்டளைகளால், வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் தமிழ்த் தேசம் ஓர் அடிமை தேசம் என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழினம் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தமிழ் தேசம் தன் இறையாண்மையை மீட்டெடுத்துக் கொள்வதில்தான் இருக்கிறது. தமிழ்த் தேசிய இனத்தை நசுக்கிக் கொண்டிருக்கும் இந்தியத்தைப் புரட்டித்தள்ளி, எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது. அதற்கான நெருக்கடி முண்டி விட்டது. ஒவ்வொரு தளத்திலும் தமிழ்த் தேசம் தன்னை இறையாண்மையுள்ள சக்தியாக நிறுவிக்கொள்ள வேண்டும். அதற்கான தன்மானத் தன்னுரிமை போராட்டம் எழவேண்டும். ஆரியத்தின் அரசியல் வடிவமான இந்திய தேசியம் அரியணையில் இருந்து ஆணையிடுகிறது. இந்தியத்தின் அடிமை முகமையாக செயல்படுகின்ற, அதற்காகவே வடிவமைக்கப்பட்ட, அதைத் தவிர வேறு எதுவும் செய்ய அதிகாரமற்ற தமிழ்நாட்டின் மாநில அரசு, ஆரியத்தின் ஆணைகளை நிறைவேற்றுகிறது.

வரலாறு முழுவதும் — பல்லவர் தொடங்கி ஆங்கிலேயர் காலம் வரை — தமிழினம் இழந்ததை விட, இந்திய விடுதலைக்குப்பின், இந்திய ஒன்றிய உருவாக்கத்திற்குப் பின் இழந்தவை ஏராளம். அனைத்தையும் இழந்து இருக்கிறோம். சுதந்திர வாழ்வை இழந்த தமிழினம் இன்று வாழ்வாதாரங்களை இழந்து கொண்டிருக்கிறது. இறையாண்மையை இழந்த தமிழினம் இப்போது தன் இருப்பையும், இருப்பிடத்தையும், இயற்கை வளத்தையும், தன் அடையாளத்தையும், எல்லாவற்றையும் தன் “சுயம்“ எனப்படும் இன இயல்பையும் இழந்து கொண்டிருக்கிறது. இவைகளைச் சுட்டிக்காட்டிய தமிழ்ச் சான்றோர்ப் பலர்; எழுச்சியூட்டி, களத்திற்குக் கொண்டு வந்தவர்கள் பலர்; ஆனால், கடமையை உணராதத் தமிழினம் சோம்பிக் கிடக்கிறது; இந்தியம் பேசி இருப்பதையெல்லாம் இழக்கிறது. இருப்பதையும் இழந்து, தாயகமற்ற ஏதிலியாக விரட்டப்படும்போது மட்டுமே உண்மை புரியும் என்ற நிலை. அந்திலை வரும்போது தமிழினம் சிதறி, ஓர் அடையாளமற்ற உதிரி மாந்த கூட்டமாக மாறி, பிற வேற்றின மக்கள் தொகுப்புக்களுக்குள், பல்வேறு மாநிலங்களில் அல்லது நாடுகளில் கரைந்து மறையும். தமிழன் நெஞ்சை நிமிர்த்திப் பேசுவதற்கு காரணமாக இன்று இருக்கும் தமிழ் மொழியும், தமிழ் பண்பாடும் அன்று இல்லாமலே போகும் அபாயம் காத்திருக்கிறது. அப்படி ஒரு நிலையைத் தான் ஆரியம் விரும்புகிறது; இந்தியா விரும்புகிறது.

இதை எதிர்த்துத் தான் நம் தமிழ்ச் சான்றோர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே தமிழ் மொழி – இன – நாட்டுப் பாதுகாப்புக்கான செயற்களங்களை அமைத்தார்கள். அவற்றை இலக்கு நோக்கிக் கொண்டு செல்லத் தவறிய தமிழினம் இன்னமும் இழப்புகளைச் சந்தித்து கொண்டு இருக்கிறது.

ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். அத்தனை பிரச்சனைகளுக்கும் தேவை ஒரு தீர்வு தமிழ்த் தேசத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும். அத்தனை பிரச்சனைகளுக்கும் அது மட்டுமே தீர்வு. தமிழ் நிலத்தில் தன்னுரிமை அரசியல் கை கொள்ளப்பட வேண்டும். தமிழ் இனத்தை அடிமை கொண்ட ஆரியத்தின் மேலாண்மையை, மேல் ஆளுகையை, அத்தனை வடிவங்களிலும் அடியோடு பெயர் தெறியவேண்டும். சமூகம், பண்பாடு, பொருளியல், அரசியல் என அனைத்துத் தளங்களும் ஆரியத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழ்த்தேசியச் சிந்தனைக் கூறுகளைச் சிதறிய அறிஞர் அயோத்திதாச பண்டிதர், தன்மானத் தடியெடுத்து ஆரியத்தை விளாசிய பெரியார், இனம் – மொழி – நாடு குறித்த விடுதலைக் கருத்தியல் கருவூலங்களை அள்ளிக்கொடுத்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஆரியத்தின் வாயில் இருந்து தமிழ்மொழியை மீட்கத் தனித்தமிழ் இயக்கம் கண்ட தமிழ்ச் சான்றோர்கள், கருத்துப் போரை, கருவிப் போராக மாற்றிக் களம் கண்ட தமிழ்த் தேசியப் போராளிகள் – தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் மற்றும் களமாடிய தோழர்கள் என்று ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ்த் தேசியக் களத்திலே நின்று தமிழினம் சமராடியது. இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது தமிழர்தம் வரலாற்றுக் கடமை; தவிர்க்கவியலா வரலாற்று கடமை. இந்த வரலாற்றுப் போக்கின் விரைவு போக்கைக் கட்டியம் கூறும் நாளாக தமிழர்ப் புத்தாண்டு நாளாகிய தை முதல் நாள் அமையட்டும்!

முதலில், தை முதல் நாள்தான் தமிழர்தம் புத்தாண்டு பிறப்பு என்பதை தமிழர் உணரவேண்டும; ஏற்க வேண்டும்.

“நித்திரையில் இருக்கும் தமிழா,
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு”
– பாவேந்தர் பாரதிதாசன்

இந்நாள் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் தொடக்கமாக அமையட்டும்.தைத்திருநாளை நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை திருவிழாவாக சிறப்பித்து பாடுகின்றன. “புதுக்கலத்து எழுந்த தீம் பால் பொங்கல்“ என்கிறது சீவகசிந்தாமணி. சங்க காலம் முதல் இன்றளவும் கொண்டாடப்படும் தமிழினத்தின் திருவிழா பொங்கல்தான். சூரியன் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வடக்கு நோக்கி செல்கிறது. இது வடசெலவு (உத்தராயணம்) எனப்படும். ஆவணி முதல் மார்கழி வரை தெற்கு நோக்கி சூரியன் பயணிப்பதை தென்செலவு (தட்சிணாயனம்) என்று குறிப்பிடுகிறார்கள். சூரியன் தென் திசையிலிருந்து வட திசையை நோக்கி திரும்பும் நாளே தை ஒன்று. இது பருவகாலத்தின் மாற்றத்தை குறிக்கிறது. மழைக்காலம் முடிந்து, கோடையின் தொடக்கமாக அறுவடைக்காலம் தொடங்குவதை தை மாதம் குறிக்கிறது. இது அறிவியல்பூர்வமானது.

வடக்கே குப்தர்களின் ஆட்சிக் காலம் கிபி 240 முதல் கிபி 550 வரை ஆகும். இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் (கிபி 375-415) பிராமணியம் புத்துயிர் பெற்ற நிலையில் விக்கிரம சகாப்தம் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இதன்படி ஆண்டு சித்திரை முதல் பங்குனி வரை என வரையறுக்கப்பட்டது. ஒரு சுற்று 60 ஆண்டுகள் என்று வகுக்கப்பட்டது. ஆண்டுகளுக்கு பிரபவ முதல் அட்சய வரை 60 பெயர்கள் சூட்டப்பட்டது. இந்த அறுபதும் கிருஷ்ணருடன் கலவியில் ஈடுபட்டு நாரதர் பெற்றெடுத்தாக ஆபாச புராணமும் எழுதப்பட்டது. பார்ப்பனர்கள் பிழைப்பு தேடி பரவிய பகுதிகளில் எல்லாம் மன்னர்கள் மற்றும் குறுநிலத் தலைவர்கள் மூலம் இந்த நடைமுறையை பரப்பினார்கள்.

தென்னிந்தியாவில் சமஸ்கிருத பெயர்களுடன் தொடங்கும் ஆண்டுகளோ சித்திரை முதல் பங்குனி வரை மாதங்களின் பெயர்களோ நீண்ட காலத்திற்கு பயன்பாட்டில் இருந்ததில்லை. இந்த பெயர்களைப் பயன்படுத்தும் விக்ரம சகாப்தம் கி.பி.842 –இல் தான் முதன்முதலாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. இந்த சமஸ்கிருத ஆண்டுகளைக் குறிப்பிடும் முதல் இலக்கியம் சுபாஷித ரத்ன சந்தோஹ (Subhashita–Ratna-Sandoha) என்னும் சமண இலக்கியம் (கிபி.993-994) ஆகும். ஆகவே, தொன்று தொட்டு சமஸ்கிருத ஆண்டுகளும் சித்திரையை முதல் மாதமாக கொண்டிருக்க கூடிய மாதங்களும் தென்னிந்தியாவில் வழக்கில் இருந்தாக கருதக்கூடாது.

தமிழகத்தில் ஆதிக்கத்தை நிறுவிய பார்பனர்களான விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில்தான் தீபாவளி, நவராத்திரி போன்ற விழாக்கள் தமிழகத்தில் புகுத்தப்பட்டன. சுயத்தை இழந்து போன இன்றையத் தமிழர்களுக்கு எல்லாமே விழாக்கள்தான். எல்லாமே தம் பண்பாடு தான் என்ற மயக்கத்தில் தமிழர்கள் ஆழ்ந்து போனார்கள். சமஸ்கிருத ஆண்டுக்கணக்கை எந்த தயக்கமுமின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்குழந்தைகளுக்கு சித்திரை முதல் பங்குனி வரை தமிழ் மாதங்கள் என்று கற்றுத்தரப்படுகிறது. இப்படி ஆரியத்தின் மேலாண்மை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் முதன்மைத் தமிழ் பேரறிஞர்களான தமிழ்த்தென்றல் திரு.வி.க, தமிழ்க்காவலர் கா.சுப்பிரமணிய பிள்ளை, சைவசமய அறிஞர் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதன் மற்றும் தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி, சில முடிவுகளை எடுத்தனர். அதன்படி, இனி திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு முறையை பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு என ஏற்பது, திருவள்ளுவர் காலம் கி.மு 31 என ஏற்பது — ஆகிய முடிவுகளை ஏற்றனர். திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை, இறுதி மாதம் மார்கழி என்றும், புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்றும், இப்போதுள்ள கிழமைகளே தொடர்ந்து வழக்கில் இருக்கும் என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1937 டிசம்பர் 26-ஆம் தேதி, திருச்சியில் தமிழர் மாநாடு கூடியது. நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்றார். அந்த மாநாட்டில் தந்தை பெரியார், கா.சு.பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், தமிழ்த் தென்றல் திரு.வி.க. தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உள்ளிட்ட அறிஞர்கள் பங்கேற்றனர். தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்றும், பொங்கல் தமிழர் விழா என்றும் மறைமலை அடிகளார் பல்வேறு சான்றுகளைக் காட்டி உரையாற்றினார். அம்மாநாட்டில் அதை தாம் ஏற்பதாக தந்தை பெரியார் அறிவித்தார். இது அம்முடிவை வலுப்படுத்தி மக்கள் மயமாக்கியது.

தமிழர்களின் தன்மான திருவிழாவாக பொங்கல் திருநாளை பெரியார் அறிவித்தார். தமிழர்தம் அறுவடை திருவிழாவுக்கு மதத் தொடர்பான பெயர்களை சூட்டி, கிருஷ்ணன் என்ற கடவுள் கூறியபடி இந்திரனுக்கு படையல் போட்டு பூசிக்கும் விழா என பார்ப்பனர்கள் கற்பித்தனர் என்று பெரியார் சாடினார். ‘பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய, அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு, மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால், பொங்கல் பண்டிகை, தை முதல் நாள் விழாக் கொண்டாடுவது அவசியமாகும். மற்றபடியாக மதச் சார்பாக உண்டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும் பெரிதும் நம் இழிவிற்கும் பார்ப்பனர் உயர்விற்கும் நம் மடமைக்கும் காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால் அவற்றை கொண்டாடக்கூடாது’ என்றும் வலியுறுத்தினார்.

சில வரலாற்று நிகழ்வுகளும் பொங்கல் பண்டிகையில் பொதிந்துள்ளன. பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது, பீடைகளை அகற்றுவது என்ற பெயரில் கற்பித்திருக்கிறார்கள். இந்தநாள் புத்தர் மறைந்த நாள் என்று கருதப்படுகிறது. இது ஆய்வின் மூலம் உறுதிப் படுத்தப்பட வேண்டிய செய்தி ஆகும். புத்தம் தமிழகத்தில் ஒழித்துக்கட்டப்பட்டது. அப்படி புத்தமதம் அழிக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட பகுதிகளிலேயே போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புத்தம் வாழும் இலங்கையில் போகி விழா கிடையாது.

தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், 2008 தை மாதம் 23-ஆம் நாள் திமுக அரசு ஓர் அரசாணையைப் பிறப்பித்தது. அதன்படி தை முதல் நாளே ஆண்டின் தொடக்கம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 2011ல் அதிமுக அரசு இதை நீக்கி மீண்டும் சித்திரை முதல் நாளே புத்தாண்டின் தொடக்கம் என அறிவித்தது.

தமிழர்களின் இன அடையாளத்தையும் பண்பாட்டையும் மொழியையும் பாதுகாக்க, தமிழர்களின் வாழ்வியலில் ஆரியம் மற்றும் பார்ப்பனியத்தின் மேலாண்மையை அழித்தொழிக்க வேண்டியது அவசியம். ஆகவே, சடங்காக இல்லாமல் தமிழர் எழுச்சியின் அடையாளமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட வேண்டும். பொங்கல் விழாவின் ஒரு கூறாக சல்லிக்கட்டு மீட்டெடுக்கப்பட்டதை ‘தைப்புரட்சி’ என்று குறிப்பிடுகிறோம். மீட்டெடுக்க வேண்டிய தளங்களும் உரிமைகளும் ஏராளம் உள்ளன. தமிழ்த்தேச தன்னுரிமையையும், தமிழர்தம் இறையாண்மையையும் மீட்டெடுக்கும் போராட்டத்தின் புத்துயிர்க்கும் தொடக்கப் புள்ளியாக தை-1 அமையட்டும்!

அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.
– பேராசிரியர் த. செயராமன்
தமிழ்த்தேசிய ஆய்வாளர் – வரலாற்றுப் பேராசிரியர்
14-01-2019

Leave a Response