பத்ரகாளியாக மாறிய கனிமொழி

அரசு வேலைகள் மற்றும் அரசு கல்வி நிலையங்களில் அனுமதி போன்றவற்றில் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் 124 ஆவது சட்டத் திருத்த மசோதா, 2019 ஐ. மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்த விவாதம் மாநிலங்களவையில் நடந்த போது திமுக உறுப்பினர் கனிமொழி, அதற்கு எதிராகப் பேசினார். அவரது உரை வெகுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அது குறித்த பதிவொன்று…..

9.01.2019 அன்று பாராளுமன்றத்தில்..

திமுகவை சார்ந்த ஒரே ஒருவரையாவது நம் மக்கள் மக்களவைக்கு அனுப்பி இருந்தால் …. சரி போனது போகட்டும்.

மாநிலங்களவையில் அதே மசோதா 09.01.2019 அன்று விவாதத்துக்கு வருகின்றது. திமுகவில் இருப்பதோ நான்கே உறுப்பினர்கள் மட்டுமே. திருமதி கனிமொழி, திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன். இதிலே ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. மொத்தம் 5 நிமிடங்கள் மட்டுமே! பேச ஆரம்பித்தார்.

முதல் வரியில் எடுத்ததும் அம்பேத்கார் சுட்டிக்காட்டியதை எடுத்தியம்பியதில் ஆரம்பித்தது தீ…. தீ பரவட்டும் என அண்ணா சொன்னது போல அடுத்தடுத்து சரவெடிகள் தான்.

“இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கார் சொன்னார்… நான் உருவாக்கிய இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுமாகின் அந்த சட்டத்தையே கொளுத்தும் முதல் ஆளாக நானே இருப்பேன்” என ஆரம்பித்தார் தனது பேச்சை.

”அவசர அவசரமாக இந்த சட்டத்திருத்த மசோதா ஒரே நாள் இரவில் கொண்டு வரப்படுகின்றது. அதை நிலைக்குழு போன்ற குழுக்களில் விவாதித்து அதன் பின்னர் மன்றத்துக்கு கொண்டு வரப்பட்டதா!… இல்லை அவசர அவசரமாக எல்லாம் நடக்கின்றது.

அய்யா நான் பெரியார் பூமியில் இருந்து இங்கு வந்திருக்கின்றேன். அந்த திராவிட இயக்கத்துக்கு சமூகநீதி விஷயத்தில் நூறாண்டு வரலாறு உண்டு” என தொடர்ந்த போது இங்கே ராஜ்யசபா நேரலை தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த நான் தொலைக்காட்சி சப்தத்தை வேகமாக்கிக்கொண்டு நாற்காலியை இழுத்து தொலைக்காட்சி அருகே அமர்ந்தேன். எனக்கு கிட்டத்தட்ட கலைஞர் பேசுவது போலவே இருந்தது. என் உயரம் எனக்கு தெரியும் என சொல்லிவிட்டு டெல்லி பாராளுமன்றம் பக்கமே செல்லாத கலைஞர்…. தன் பங்கு மத்திய மன்றத்திலும் இருக்க வேண்டும் என நினைத்துத்தான் திருமதி கனிமொழி அவர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தார் என்றே நினைக்கின்றேன். சமூகநீதி காக்க வந்த பத்ரகாளியாக மாறினார். தனக்குக் கிடைத்த நேரத்தில் கிட்டத்தட்ட எல்லா விஷயத்தையும் அனேகமாகப் பதிவு செய்து விட்டார்.

சாதியால் புறக்கணிக்கப்பட்ட மக்களை முன்னுக்குக் கொண்டுவர, முதன் முதலாக இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததே நீதிக்கட்சி ஆட்சி என்பதைப் பதிவு செய்தார். நேரு முதன் முதலில் சட்டதிருத்தம் கொண்டு வந்ததை சொன்னார். இச்சட்டம் இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கே முரணானது என்பதையும் காலங்காலமாக சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டதே கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பதையும் அழுத்தமாக குறிப்பிட்டார்.

இதே விஷயத்தை தமிழக எதிர்க்கட்சி தலைவர் தன் அண்ணன் அவர்கள் 08.01.2019ல் தமிழக சட்டமன்றத்தில் பதிவு செய்ததை டெல்லி பாராளுமன்றத்தில் இவர் பதிவு செய்தார். அப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட 5 நிமிடம் முடிவான நிலையில் துணை சபாநாயகர் குறுக்கிடவே இச்சட்டத்தை எதிர்க்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த , வெகுசில கட்சிகளே பேசும் நிலையில், தனக்கு பேச கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என சொல்லிவிட்டு தொடர்ந்தார்.

தமிழகத்தில் இப்படி இடஒதுக்கீடு செய்யும் முன்பாக கலைஞர் அவர்கள் ஒரு நீண்ட ஆய்வை நடத்தி, சட்டநாதன் கமிஷன், அம்பாசங்கர் கமிஷன் போன்றவைகள் அமைத்து ,அறிஞர் குழுக்களை அமைத்து அதன் பின்னரே இட ஒதுக்கீடு செய்ததை குறிப்பிட்டு, இப்படி நீங்கள் பொருளாதார அடிப்படை இட ஒதுக்கீடு அமல்படுத்த எந்த விதமான ஆய்வை நடத்தினீர்கள்? உங்களுக்கு அந்த 10 சதம் என்னும் அந்த எண் எப்படி ஒதுக்கினீர்கள் என சவாலாகவே கேட்டார். இது தான் கலைஞர் புதல்வி என்பது! கிடுக்கிப்பிடி என்பது இது தான்!

கலைஞர் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கும் முன்பாக அருந்ததியர்கள் எத்தனை சதம் இருக்கின்றார்கள்? அப்படி கொடுத்தால் மீதமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதிப்பு வருமா? அதே போல பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்து இஸ்லாமியருக்கு கொடுக்கும் போதும்… ஒரு நீண்ட ஆய்வு செய்து அந்த சதவிகித நம்பரை பிடித்தார். (அதே போல ஆந்திராவில் இஸ்லாமியருக்கு உள் ஒதுக்கீடு கொடுத்து பின்னர் அது உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இங்கே தமிழகத்தில் அப்படி நடந்து விடக்கூடாது என சட்டநிபுணர்களை அழைத்து ஆந்திராவில் ஏன் அது உச்சநீதிமன்றத்தால் ரத்து ஆனது என ஆய்வு செய்து அந்த தவறுகள் வராமல் தமிழகத்தில் சட்டமாக்கினார். அதைத்தான் திருமதி கனிமொழி அவர்கள் அவையில் கேட்டு அதிரவைத்தார்.

அந்த 10 என்கிற அந்த எண்ணிக்கைக்கு நீங்கள் என்ன விதமாக ஆய்வை செய்தீர்கள் என்பது மிக மிக முக்கியமான கேள்வி. ஊர் திருவிழாவில் பெரியவர்கள் தன் சட்டைப்பையில் இருந்து கையில் அகப்பட்டதை எடுத்து பலூன் வாங்க பசங்களுக்கு தருவது போல ஒரு அரசாங்கம் அதுவும் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய அரசாங்கம் இப்படி செய்ததை தான் தன் வார்த்தைகளால் விளாசினார்.

இன்னும் 100 நாட்களில் பாராளுமன்ற தேர்தல் என்னும் ஒன்றை தவிர, வேறென்ன அவசரம் தற்போது இச்சட்ட மசோதாவுக்கு ஏற்பட்டது? என அவர் சாட்டையை சொடுக்கிய போது சபாநாயகர் இந்தியில் குறுக்கிட்டார். app dugne time le chuke ho என சொன்ன போது மிகவும் லாவகமாக தான் கலைஞரின் புதல்வி என்பதை சபைக்கு தன் ஒரே பதிலால் மடக்கினார் இந்த சுயமரியாதை சிங்கம், ஓடி வந்த இந்திப்பெண்ணே என முழக்கமிட்டவரின் மகள் can you speak to me in a language i understand? என்றார். அதற்குள் மற்ற பெண் உறுப்பினர்கள் பலரும் திருமதி கனிமொழியை பேசவிடுங்கள் என முழக்கமிட சபாநாயகருக்கு வேறு வழியில்லாமல் போனது.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கவே முடியாது ஏனனில் பொருளாதாரம் என்பது “மாற்றத்துக்கு உட்பட்டது”. ஆனால் சாதி என்பது நிலையானது. ஒருவர் ஏழ்மை நிலையில் இருந்து ஏற்றம் பெறலாம். அவ்வளவு ஏன்? மதம் கூட மாறிவிடலாம். ஆனால் சாதி என்பது மாற்றமுடியாத விஷயமாக உள்ளது. உங்களுக்கு ஒரே நோக்கம் பொருளாதார அடிப்படையில் ஏழ்மையை போக்குவது எனில் கல்விக்கடனை ரத்து செய்யலாமே? கல்விக்கடன் சென்ற காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதிலே ஜாதி கிடையாது. எல்லோருக்கும் கல்விக்கடன் உண்டு. அதில் நீங்கள் குறிப்பிடும் முற்ப்பட்ட வகுப்பினரும் தான் கல்விக்கடன் பெற்றிருக்கின்றார்கள். கல்வி கற்று முடித்த பின்னர் அவர்கள் கல்விக்கான வேலையை உருவாக்கித்தர இந்த அரசு முன்வரவில்லை. அதனால் அவர்களால் அந்த கல்விக்கடனை அடைக்க முடியவில்லை. வங்கிக்காரர்கள் அவர்களை துரத்துகின்றனர். ஒரு திருடனை பார்ப்பது போல பார்க்கின்றனர். நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமாகின் அதை ரத்து செய்யலாமே? என்று சபையில் முழங்கிய போது யாருக்கும் பதில் சொல்லத்துப்பில்லை.

இதே போல அதற்கு முந்தினம் தம்பித்துரை மக்களவையில் கேட்டார். “அவர்கள் வறுமையை ஒழிக்க வேண்டுமெனில் நீங்கள் தேர்தல் நேரத்தில் சொன்னபடி 15 லட்சத்தை வங்கியில் போடுங்கள். அவர்கள் வறுமை ஒழியும் என நக்கலாக கேட்டார். ஆனால் அது நக்கல். பி ஜே பி யால் அந்த 15 லட்சம் போட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் திருமதி கனிமொழி சொன்ன யோசனை உருப்படியானது. சாத்தியப்படக்கூடியது. பயனுள்ளது. சென்ற தேர்தலில் திமுக தன் தேர்தல் அறிக்கையில் கூட இதை சொல்லியிருந்தது.

மேலும் பேசும் போது “பிற்படுத்தப்பட்டோருக்கு இடப்பங்கீடு அளிப்பதற்கான சட்டங்கள் “socially and educationally” என்று தான் சொல்கின்றன. ஆகவே இடப்பங்கீடு ஏழ்மை ஒழிப்பு திட்டமோ, பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கான தீர்வு அல்ல அது சாதி ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் சமமான வாய்ப்புகளை உண்டாக்கும் நடைமுறை. முன்பு ஒருமுறை மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% கொடுக்க முயன்ற போது உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அதை ரத்து செய்தது.அந்த ஒன்பது நீதிபதிகளில் 8 பேர் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தனர் என்பது முக்கியமான விஷயமாகும். அந்த தீர்ப்பானது இடப்பங்கீடு ஒட்டுமொத்தமாக 50% உட்பட்டதாக இருக்க வேண்டும். socially and educationally என்கிற அடிப்படை தான் backwardness க்கான வரையறை என்பதை தெளிவாக சொன்னது உச்சநீதிமன்றம்” என்றார்.

இப்படி ஒரு நீளமான அழகிய உரை நிகழ்த்தினார். போகிற போக்கில் “நீங்கள் ஜி எஸ் டியையும் இப்படி அவசர கதியில் கொண்டு வந்து தான் நாட்டை அழித்து விட்டீர்கள், எங்கள் தமிழ்நாட்டில் திருப்பூர் முழுவதும் ஏன் தமிழகமே சிறு தொழில் நசிந்து விட்டது. அதே போல மீத்தேன் எடுக்கின்றேன் என டெல்டா வரண்டு விட்டது. விவசாயத்தையும் அழித்து விட்டீர்கள். விவசாயிகள் பெரிய பேரணி நடத்தினார்களே! ஏன் தமிழக விவசாயிகள் மாதக்கணக்கில் இங்கே வந்து போராடினார்களே! அழைத்து பேசியது உண்டா? விவசாயிகள் தங்கள் கடைசி முடிவாக தற்கொலையை தேர்வு செய்து மடிந்து போகின்றார்கள். தீர்ப்பில் ஏற்கனவே சொல்லி இருக்கின்றார்கள். ஏதோ ஒரு அவசர நிலை வந்தாலொழிய இடஒதுக்கீட்டில் கை வைக்க கூடாது என உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் இப்போது என்ன அவசரநிலை வந்துள்ளதா? நீங்கள் அவசர அவசரமாக சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டிய காரணம் என்ன? ஒரே காரணம் இன்னும் 100 நாளில் தேர்தல் வர இருக்கின்றது. இது போன்ற காரணங்களால் நான் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிக்க போகின்றேன்” என முடித்தார் கலைஞரின் மகள்.

திருமதி கனிமொழி அவர்கள் …. அருமை வாழ்த்துகள் சகோதரி

– ராதாகிருஷ்ணன்

Leave a Response