இந்தியத் திரையுலகின் பெருமைமிகு அடையாளம் மிருணாள்சென் மறைந்தார்

இந்திய சினிமாவை உலகத் தரத்துக்கு இணையாக உயர்த்தியவரான வங்காள மொழி திரைப்பட இயக்குநர் மிருணாள் சென் இன்று காலமானார். அவருக்கு வயது 95.

முதுமையில் நோயால் அவதிப்பட்டு வந்த மிருணாள் சென் இன்று காலை 10.30 மணிக்கு மரணத்தைத் தழுவினார் என்று அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். மிருணாள்சென்னின் மனைவி கீதா சென் கடந்த ஆண்டு காலமானார்.

1923-ம் ஆண்டு மே 14-ம் தேதி வங்காளத்தில் உள்ள பரித்பூரில் மிருணாள் சென் பிறந்தார். தற்போது பரித்பூர் வங்கதேசத்தில் இருக்கிறது. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் பயின்ற மிருணாள்சென், மார்க்சியத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு, கொல்கத்தா கம்யூனிஸ்ட் கட்சியின் கலாச்சாரப் பிரிவில் முக்கிய பொறுப்புகள் வகித்தார். கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டுவரை மாநிலங்களவை உறுப்பினராகவும் மிருணாள் சென் இருந்தார். கடைசியாக ‘அமார் புவன்'( இது எனது நிலம்) என்ற திரைப்படத்தை கடந்த 2002-ம் ஆண்டு இயக்கினார் மிருணாள் சென் அதன்பின் இயக்கவில்லை.

திரைப்படங்கள் குறித்து அதிகம் படித்ததால், திரைப்படத்துறையில் நாட்டம் கொண்டு இயக்குநராக மிருணாள் சென் மாறினார். கடந்த 1956-ம் ஆண்டு ‘ராத் போர்’ என்ற படத்தை இயக்கினார் மிருணாள் சென். இவரின் இந்த முதல் படம் படுதோல்வியில் முடிந்தது. பிரான்ஸ் புதிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் பெரும்பாலான படங்கள் அமைந்திருக்கும்.

அதன்பின் ‘ஆகாஷ் குசும்’ (1965), ‘புவுன் ஷோம்’ (1969), ‘கொல்கத்தா 71 அன்ட் இன்டர்வியூ’ (1971), ‘காந்தர்'(1974), ‘கோரஸ் (1975), ‘மிரிகயா’ (1977), ‘அகாலேர் சந்தானே’ (1981), ‘ஏக் தின் அச்சானக்’ (1989), ‘அமர் புவன்’ (2002) ஆகிய திரைப்படங்களை மிருணாள் சென் இயக்கியுள்ளார்.

பெரும்பாலும் மிருணாள் சென் இயக்கிய திரைப்படங்கள் நாட்டில் நடுத்தர குடும்பத்து மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களின் அடிப்படை வாழ்க்கை சிரமங்கள் ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டுவதாகவும், பெரும்பாலும் கொல்கத்தா நகரத்திலேயே எளிமையாக எடுக்கப்பட்ட படமாகவும் இருக்கும். இவரின் கதையில் கொல்கத்தா நகரம் என்பது ஒரு கதாபாத்திரமாகவே உலவும்.

மிருணாள் சென் இயக்கிய ‘புவன் ஷோம்’ எனும் திரைப்படம் இவரை உலக அளவில் அடையாளம் காணச் செய்தது. இவர் கடந்த 1983-ம் ஆண்டு காரிஜி என்ற வங்கமொழி திரைப்படம் கேன் திரைப்டவிழாவில் ஜூரி விருதைப் பெற்றது.

மிருணாள் சென்னின் 60 ஆண்டு திரையுலக வாழ்க்கையில் இந்தி, வங்க மொழிக்கு சம அளவு முக்கியத்துவம் கொடுத்து தனது திரைவாழ்க்கையை நடத்திச் சென்றார். மிருணாள் சென் இயக்கிய ‘இன்டர்வியூ’, ‘கொல்கத்தா 71’, ‘படாடிக்’ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய ‘மாஸ்டர் பீஸ்’ ஆகும். மேற்கு வங்கத்தில் சமூக, அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவர் மறைவுக்கு இந்திய குடியரசுத் தலைவர், மேற்கு வங்க முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Leave a Response