ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் மட்டைப்பந்து போட்டி தொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி….
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 2020 ஆம் ஆண்டுக்கான ஏலம் நடைபெறும் தேதி, இடத்தை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
அதன்படி வழக்கமாக ஏலம் நடைபெறும் பெங்களுரூவுக்குப் பதிலாக இந்த முறை ஏலம் முதல் முறையாக கொல்கத்தாவில், டிசம்பர் 19 ஆம் தேதி நடக்க உள்ளது.
வரும் 2021 ஆம் ஆண்டுதான் முழுமையான அளவில் வீரர்கள் ஏலம் நடக்கும் என்பதால், அடுத்த ஆண்டு நடக்கும் 2020 ஆம் ஆண்டு ஏலத்தில் வீரர்களில் சிறிய அளவில்தான் மாற்றம் இருக்கும். இதற்கு முன் மிகப்பெரிய அளவில் அதாவது ஒரு அணியில் 5 வீரர்கள் வரை மாற்றக்கூடிய ஏலம், புதிதாக எடுக்கக்கூடிய ஏலம் கடந்த 2018 ஜனவரி மாதம் நடந்தது.
இந்த நிலையில், வரும் நவம்பர் 14 ஆம் தேதியுடன் வர்த்தகத்துக்கான காலம் முடிவதால், அதுகுறித்து 8 அணிகளின் நிர்வாகத்துக்கும் முறைப்படி ஐபிஎல் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. அடுத்த ஆண்டு ஏலத்துக்கு ஒட்டுமொத்தாக ரூ.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் கடந்த ஆண்டு இருக்கும் இருப்புத்தொகையைக் காட்டிலும் கூடுதலாக ரூ.3 கோடி வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதிகபட்சமாக டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் அதிகபட்சமாக ரூ.8.2 கோடியும், அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ.7.15 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ.6.05 கோடியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ரூ.5.3 கோடியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் ரூ.3.7 கோடியும் கையிருப்பு இருக்கிறது
இதுதவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.3.2 கோடியும், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரூ.3.05 கோடியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் ரூ.1.8 கோடியும் இருப்பு இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.