தமிழர்களை இழிவு செய்யும் தாக்கரே படம் – நடிகர் கோபம்

“உத்தாவோ லுங்கி, பஜாவோ புங்கி.”

மும்பை நகரில் குடியேறி அதனை உலகின் முக்கியமானதொரு பெருநகரமாக வளர்த்ததில் மராத்தியர்களுக்குச் சமமாகப் பங்களித்தவர்கள் பிற மாநில மக்கள். குறிப்பாகத் தென்னிந்தியர்கள். இன்னும் குறிப்பாகத் தமிழர்கள்.

அவர்களுக்கு எதிரான பகையுணர்வை வளர்த்துத் தனது கட்சியையும் சொந்த செல்வாக்கையும் வளர்த்தவர் பால் தாக்கரே. உசுப்பேற்றுவதற்கு அவர் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தைகள்தான் முதலில் உள்ளவை. “லுங்கியைத் தூக்கு” என்று ஆரம்பித்து “….. …..” என்று ஏதோ மோசமான வசையாக முடிகிற வார்த்தைகள் அவை.

அவருடைய வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘தாக்கரே’ என்ற மராத்தி/இந்தி திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாகிறது. அபிஜித் பான்ஸே இயக்கிய அந்தப் படத்தின் சில சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு தணிக்கை வாரியம் சொல்லியிருக்கிறது, இயக்குநர் மறுத்திருக்கிறார்.

இந்த விவகாரம் போய்க்கொண்டிருக்கிற நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. பெரிய சாகச ஹீரோவுக்கான அதிரடிப் பின்னணி இசையோடு வந்துள்ள அந்த முன்னோட்டத்திலேயே இந்த வசனம் இரண்டு மூன்று இடங்களில் வருகிறது.

தென் மாநில மக்களை இழிவுபடுத்துகிற இந்த வசனத்தின் நோக்கத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பியிருககிறார் திரைப்பட நடிகர் சித்தார்த். டிரெய்லரை நானும் பார்த்தேன். தமிழ்நாட்டுக்காரர் ஒருவர் தாக்கரேயை இடித்துவிட்டுத் திட்டுவது போலக் காட்சி வருகிறது. அவரது பேச்சைக் கேட்டபின் ஒருவர் உடுப்பி ஓட்டல் மீது கல்லெறிவது போன்ற காட்சியும் வருகிறது.

டிரெய்லரிலேயே இந்த வன்மம் என்றால் மெயின் படத்தில் எவ்வளவு இருக்குமோ என்ற கவலை நியாயமானது. வெறுப்பை வணிகமாக்குகிறீர்களா என்று ட்விட்டர் பதிவில் சித்தார்த் கேட்டிருப்பதை நானும் திருப்பிக் கேட்கிறேன்.

முழுப்படம் வருவதற்கு முன் தீர்ப்புக்குப் போகக்கூடாதுதான். தாக்கரேயின் வெறுப்பரசியலைப் படம் நியாயப்படுத்துகிறதா அல்லது விமர்சிக்கிறதா என்று படம் பார்த்தால்தான் தெரியும். இது அந்த டிரெய்லர் பற்றிய கருத்துதான்.

ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றைக் கதையாக்குகையில் அவரது உண்மை முகத்தைம் பேச்சையும் நேர்மையாகப் பதிவு செய்வது கலை. ஆனால், எந்தக் கண்ணோட்டத்தில் பதிவு செய்கிறார்கள் என்பது அரசியல். ‘தாக்கரே’ படத்தில் இருப்பது வெறுப்பரசியல் நெருப்பை அணைக்கிற கண்ணோட்டமா, விசிறிவிடுகிற கண்ணோட்டமா?

மனசாட்சிகளை உலுக்கட்டும் உங்கள் பதிவு சித்தார்த்

– அ.குமரேசன்

Leave a Response