உங்கள் ஓட்டு வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் சொன்னாரா? – புதிய சர்ச்சை

சமூகவலைதளங்களில் முக்கிய இடம் வகிக்கிறது ட்விட்டர். அதில் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட ஏராளமான பிரபலங்கள் இருக்கிறார்கள்.

அவ்வாறு இருக்கும் பிரபலங்களின் ட்விட்டருக்கு நீல வண்ணக் குறியீடு இருக்கும். இப்போது அதிலும் ஆபத்து வந்திருக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கம் போன்று ஒன்றை உருவாக்கி நீலவண்ணக் குறியீட்டையும் வைத்து மு.க.ஸ்டாலின் பதிவு செய்வதுபோன்று போலியாகப் பதிவிடப்பட்டுள்ளது.

அந்தப்பதிவில், கோவிலுக்குச் செல்பவர்கள் ஓட்டு திமுகவுக்கு வேண்டாம் அப்படி வாக்களித்துத்தான் வெற்றிபெற வேண்டுமானால் அப்படிப்பட்ட வெற்றியே தேவையில்லை என மு.க.ஸ்டாலின் பதிவிட்டதுபோன்று பதிவிடப்பட்டுள்ளது.

மற்றொரு ட்விட்டரில் மாற்று மதத்துக்கு ஸ்டாலின் ஆதரவு தந்து இந்து மதத்திலுள்ளவர்களைத் திட்டுவது போன்று பதிவு செய்துள்ளனர். இதைப் பார்ப்பவர்கள் ஸ்டாலினே பதிவு செய்ததுபோன்று எண்ணம் உண்டாக்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி சார்பில் வழக்கறிஞர்கள் ப.முத்துக்குமார், ஆ.தாமோதரன் ஆகியோர் காவல் ஆணையர் அலுவலகம் வந்தனர்.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து போலி ட்விட்டர் பக்கம் குறித்து புகார் மனுவை அளித்தனர். ட்விட்டர் பக்கத்தின் நகல் இணைப்பையும் சேர்த்து அளித்தனர். அவர்கள் புகாரில் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலியான ட்விட்டர் பக்கத்தை உருவாக்கி, அதில் அவருடைய கருத்திற்கு எதிராகவும், மத உணர்வுகளுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்கம் போலவே போலி ட்விட்டர் பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது.

போலி ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலினின் புகழுக்கு பொதுமக்கள் மத்தியிலும், குறிப்பாக இந்து மத மக்களிடையே களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

போலி ட்விட்டர் பக்கத்தில், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் வாசகங்கள் அமைந்துள்ளதால், இதனை வெளியிட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம், நீலவண்ணக் குறியீடு இருந்தால் அது உண்மையான கணக்கு என்கிற நம்பிக்கைக்கும் ஆபத்து வந்துவிட்டது.

Leave a Response