கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்தேன் – கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உருக்கம்

இந்திய மட்டைப் பந்தாட்ட அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிசம்பர் 4,2018 அன்று அறிவித்தார்.

தொடக்க ஆட்டக்காரராகப் புகழ்பெற்ற கவுதம் கம்பீர் இந்திய அணிக்காக 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி டாக்காவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

5 நாள் போட்டியைப் பொறுத்தவரை 2004 ஆம் ஆண்டு மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கம்பீர் அறிமுகமானார்.

இந்திய அணிக்காக 13 ஆண்டுகள் விளையாடியுள்ள கம்பீர், டி20 போட்டியில் 2007 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 4,154 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். இதில் 9 சதங்கள், 22 அரை சதங்கள் அடங்கும்.

147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 5,238 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். இதில் 11 சதங்களும், 34 அரை சதங்களும் அடங்கும்.

சிறந்த தொடக்க ஆட்டக்காரராக கம்பீர் வலம் வந்து, எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். 37 டி20 போட்டிகளில் விளையாடி 932 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 7 அரை சதங்கள் அடங்கும்.

இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டில் இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து விலக்கப்பட்ட கம்பீருக்கு 2016 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க கடைசியாக வாய்ப்பு கிடைத்தது. இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நவம்பர் 9 ஆம் தேதி நடந்த அந்த டெஸ்ட் போட்டியே கம்பீர் இந்திய அணிக்காக விளையாடிய கடைசிப் போட்டியாகும். அதன் பின் இந்திய அணியில் இருந்து முற்றிலும் ஓரம் கட்டப்பட்டார்.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராகப் பொறுப்பேற்று அந்த அணிக்கு 2 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுத்தார்.

கடைசியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தலைவராக இருந்தார். கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்படாத காரணத்தால் தானாகவே அணித்தலைவர் பதவியைத் துறந்து விளையாடாமல் விலகினார்.

இந்நிலையில் ரஞ்சி, துலீப் டிராபி போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும் கம்பீரை தொடர்ந்து பிசிசிஐ நிர்வாகம் அணிக்குத் தேர்வு செய்யாமல் புறக்கணித்து வந்தது. வயது மூப்பு காரணத்தைக் காட்டி கம்பீர் புறக்கணிக்கப்பட்டார்.

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும் கம்பீரை விடுவித்தது. இதையடுத்து தனது கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிய கம்பீர் இன்று ஓய்வு அறிவித்தார்.

இது குறித்து கம்பீர் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், ”மிகுந்த கனத்த இயத்துடன் மிகவும் கடினமான இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.என்னுடைய அனைத்து விதமான கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்தும் ஓய்வு பெறலாம் என்று முடிவு செய்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

காணொலியில் கம்பீர் வெளியிட்ட செய்தியில், ”15 ஆண்டுகள் நான் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடிய நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும், அழகான இந்த விளையாட்டில் இருந்து இந்த கம்பீர் ஓய்வு பெறுகிறேன். வலிகள், வேதனைகள், தோல்விகள் இருந்தாலும் கூட அடுத்தகட்ட வாழ்க்கையை நோக்கி நகர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது ரஞ்சிக்கோப்பைப் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் கம்பீர், வரும் 6-ம் தேதி ஆந்திரா மாநிலத்துக்கு எதிராக விளையாடுவதே அவரின் கடைசிப் போட்டியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Leave a Response