ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட
தமிழ்நாடு அரசு அமைச்சரவையைக் கூட்டி
கொள்கை முடிவெடுக்க வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்….

“முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்ற வகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான பசுமைத் தீர்ப்பாய வழக்கு நடந்து வருகிறது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் காப்பர் குறித்த மூன்று வழக்குகள் விசாரணையில் இருந்தாலும், 28.05.2018 அன்று தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு பிறப்பித்த ஆணை குறித்த வழக்குதான் முகாமையானது.

இதுகுறித்து, அனைத்துத் தரப்பினரிடமும் நேரடி விசாரணை நடத்தி பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அறிக்கை அளிப்பதற்கு வல்லுநர் குழுவை அமர்த்த தீர்ப்பாயம் முடிவு செய்தபோது, ஓய்வுபெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியம் அல்லது சந்துரு தலைமையில் இக்குழுவை அமைக்கலாம் என்ற கருத்து வந்தபோது, வேதாந்தா ஸ்டெர்லைட் தரப்பு தமிழர்கள் அனைவரும் தமக்கு எதிராகக் கருத்து சொல்வார்கள் என்று எதிர்ப்புத் தெரிவித்தது.

பசுமைத் தீர்ப்பாயமோ, இதை ஏற்றுக் கொண்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் வல்லுநர் குழுவை அமைத்தது. அப்போதே தமிழர்களுக்கு நீதி கிடைக்காதோ என்ற ஐயம் எழுந்துவிட்டது!

தருண் அகர்வால் குழு தனது விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் தீர்ப்பாயத்தில் வழங்கியது. அதன் முகாமையான முடிவுகளை 28.11.2018 அன்று நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதி தருண் அகர்வால் திறந்த நீதிமன்றத்தில் படித்தார். ஆனால், இந்த அறிக்கையின் நகல்களை எதிர் மனுதாரர்களுக்கு தருவதற்கில்லை என்றும் அறிவித்தார். இது அடுத்த கோணல்!

அகர்வால் அறிக்கை, “ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணை இயற்கை நீதிக்குப் புறம்பானது; ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு கூறியுள்ள காரணங்கள் வலுவானதாக இல்லை” என்று கூறியது.

மேலும், “ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுற்றுச்சூழல் தொடர்பான நிபந்தனைகளையும் நெறிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கத் தவறியதாக இருந்தாலும், அவை ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குரிய காரணமாக அமைய முடியாது” என்றது. சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று பரிந்துரைத்தது. வழக்கு 2018 திசம்பர் 7ஆம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இடையிட்டு மனுதாரர்களாக இணைந்த திரு. வைகோ, பேராசிரியர் பாத்திமாபாபு உள்ளிட்டோர் முதல்நிலை எதிர்ப்பாக இந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு தமிழ்நாடு அரசின் ஆணை மீதான மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்க அதிகாரம் உண்டா என்ற அடிப்படை வினாவை தொடுத்திருந்தனர்.

தனது விசாரணை வரம்பில்தான் ஆலை மூடல் ஆணை வழக்கு வருகிறது என்பதை முதல் நிலையில் நிலைநாட்டாமல், தொடர்ந்த வழக்கை இத்தீர்ப்பாயம் விசாரிப்பதே நீதிமுறைமைக்கு எதிரானது! விசாரணைக் குழு அறிக்கையின் நகலை மனுதாரர்களுக்குத் தர முடியாது என்று வெளிப்படையாக அறிவிப்பது, அதைவிட நீதிமுறைமைக்குப் புறம்பானது!

பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு எப்படி அமையும் என்பதற்கான அபாய அறிவிப்பாகவே, விசாரணைக் குழுவின் அறிக்கையும், அதுகுறித்த தீர்ப்பாயத்தின் அணுகுமுறையும் அமைந்திருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை இன்னும் வலுவாக மேற்கொள்வதோடு, அமைச்சரவையைக் கூட்டி ஒரு கொள்கை முடிவெடுத்து, அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்!

செம்பு தயாரிப்பதற்கு உயர் வெப்பத்தில் சால்க்கோசைட், சால்க்கோ பைரைட் போன்ற செம்புத் தாதுக்களை உருக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் ஆலைகளை தடை செய்வது என்ற கொள்கை முடிவெடுத்து, சட்டம் இயற்றினால்தான் தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு வலுவான வாய்ப்பு ஏற்படும்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடைபிடிப்பது போன்ற உருக்குத் தொழில்நுட்பத்தை தடை செய்து ஐ.நா. ஏற்பாட்டில் உருவான மின்னாமாட்டா உடன்படிக்கையில் இந்திய அரசும் கையெழுத்திட்டுள்ளது. இந்த மின்னாமாட்டா உடன்படிக்கை மாற்றுத் தொழில்நுட்பங்களைப் பரிந்துரைக்கிறது.

இந்திய அரசு தான் கையெழுத்திட்டுள்ள ஐ.நா. உடன்படிக்கையைப் பின்பற்றி, உயர் வெப்பத்தில் உருக்கும் தாமிர ஆலை தொழில்நுட்பத்தைத் தடை செய்து சட்டமியற்ற வேண்டும்!

பதிமூன்று உயிர்களை பலிகொடுத்த தமிழ்நாடு எக்காரணம் கொண்டும், ஸ்டெர்லைட் காப்பர் ஆலை திறப்பதை அனுமதிக்கவே கூடாது!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

=

Leave a Response