தமிழர்கள் நிம்மதியாக இல்லையென்றால் சிங்களரும் நிம்மதியாக வாழமுடியாது – சீமான் அதிரடி

நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் தஞ்சையில் நவம்பர் 27 அன்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஒரு நாட்டில் இருந்து பிரிந்து இன்னொரு நாடு உருவாவது பிரிவினை ஆகாது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்களர்களுக்கு இந்தியா துணை நின்றது தவறானது.

விடுலைப்புலிகளை ஒழிப்பது தான் இந்தியப் பாதுகாப்புக்கு நல்லது என்று செயல்பட்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தவறானது.

தமிழ்ஈழம் மலர்ந்து இருந்தால் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கும் குழந்தையைப் போல் இந்தியாவுடன் இணக்கமாக இருந்திருக்கும்.

இந்திய இராணுவத்தில் தமிழர்கள், சீக்கியர்கள் என அனைத்து மாநிலத்தினரும் இடம் பெற முடியும். ஆனால் இலங்கை ராணுவத்தில் தமிழர்கள் இடம் பெற முடியாது.

அப்படி இருக்கும்போது அந்த மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும். 70 சதவீத சிங்களர்கள், 30 சதவீத தமிழர்கள் இலங்கை ராணுவத்தில் இடம் பெற்று இருந்தால் போராட்டமே நடந்து இருக்காது.

இழந்துவிட்ட உரிமையைக் கேட்டுப் பெற முடியாது. போராடித்தான் பெற முடியும். திராவிடக் கட்சிகளுடன் எந்தக் காலத்திலும் அரசியல் கூட்டணி கிடையாது.

ஒரு காலத்தில் எங்கள் வலிமையை உலகம் புரிந்து கொள்ளும்.ஈழத்தில் என் மக்கள் நிம்மதியாக வாழாமல் சிங்களர்களால் நிம்மதியாக வாழ முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response