
இதுவரை தமிழ்த்திரையுலகில் வெகுமக்களுக்காகப் போராடும் தீவிர கம்யூனிஸ்ட்களை வில்லன்களாகவே சித்தரித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப்படத்தில் அவர்களைக் கதாநாயகண் ஆக்கியிருக்கிறார் இயக்குனர் ஜனநாதன்.
ஆர்யாவுக்கு மரணதண்டனை என்று தீர்ப்புச் சொல்லுவதோடு தொடங்குகிறது படம். தூக்குத்தண்டனை வேண்டாம் என்னைப் போர்க்கைதியாகப் பாவித்துச் சுட்டுக்கொல்லுங்கள் என்று ஆர்யா கேட்கிறார். நீதிமன்றத்தால் அந்தக்கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. சிறையில் ஆர்யா அடைக்கப்படுகிறார். ஆர்யாவைச் சிறையிலிருந்து மீட்க நாயகி கார்த்திகா தலைமையில் அவர்களுடைய இயக்கம் போராடுகிறது. ஆர்யாவைத் தூக்கில் போட்டுத் தன் கடமையைச் செவ்வனே செய்யவேண்டும் என்கிற துடிப்புள்ள அதிகாரியாக ஷாம் இருக்கிறார். தூக்குப்போடும் வேலையை வெறுத்து தொடர்வண்டித்துறையில் தற்காலிகப்பணியாளராக இருக்கும் விஜய்சேதுபதியைத் தூக்குப்போட அழைக்கிறார்கள். முதலில் மறுத்துவிட்டு பிறகு ஆர்யா தப்பிக்க உதவவேண்டும் என்பதற்காக அந்த வேலையை ஒப்புக்கொள்கிறார் விஜயசேதுபதி. ஆர்யா சிறையிலிருந்து தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படம். அதை மிகவும் விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் பெரும்பகுதி சிறைக்குள்ளேயே நடக்கிறது என்றாலும் போரடிக்கவில்லை. பேனா வாங்கிக்கொடுத்ததற்காக தூக்குத்தண்டனை என்று ஒருவரைச் சுட்டுவது, இளம்பெண் ஒருவரைக கற்பழித்துக்கொன்றார் என்ற குற்றத்திற்காக ஆயுள்தண்டனை பெற்றிருக்கும் ஒருவரிடம், உன்னை விசாரித்த அதிகாரி உன்னை திட்டமிட்டு இந்தவழக்கில் சிக்கவைத்துவிட்டதாக எழுதி வைத்துவிட்டுச் செத்துப்போய்விட்டார் அதனால் உன்னை விடுதலை செய்கிறேன் என்று நீதிபதி சொன்னதும், அதைக்கேட்டுக் கதறியழுதுகொண்டே நான்தான் கற்பழிச்சேன்னு நினைச்சு அவமானம் தாங்கமுடியாம என் மனைவியும் பொண்ணும் தற்கொலை பண்ணிகிட்டாங்க அவங்க உயிரைத் திருப்பித்தருவீங்களா என்று கைதி கேட்பது உள்ளிட்ட பல காட்சிகளில் நடைமுறை அவலங்களைச் சுட்டிக்காடுகிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
விஜயசேதுபதி நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஷாமும் அவருக்கு இணையாக நடித்திருக்கிறார். ஆர்யா கார்த்திகா ஆகியோரும் போராளிகள் வேடத்துக்கு நியாயமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருவரைத் தூக்கில் போட இவ்வளவு நிதானமாகத் திட்ட்மிட்டு அதற்காகத் தயாராகும் காட்சிகளைப் பார்க்கும்போது உடல் நடுங்குகிறது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது தயவுசெஞ்சு இனிமே யாரையும் தூக்குல போடாதீங்க என்று வாய்விட்டுக் கத்தவேண்டும் போல் தோன்றுகிறது.
