தமிழீழம் சிவக்கிறது நூலை அழிக்க ஆணை குறித்து பழ.நெடுமாறன் கருத்து

பழ.நெடுமாறன் எழுதிய தமிழீழம் சிவக்கிறது நூலை அடியோடு அழிக்கவேணும் என்ரு நீதிமன்றம் தீர்ப்பு கொஉத்திருப்பதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்…

“தமிழீழம் சிவக்கிறது” என்ற தலைப்பில் நான் எழுதிய நூலுக்குத் தமிழக அரசு தடை விதித்தது. 2006 ஆம் ஆண்டில் என்மீதுள்ள வழக்கைத் திரும்பப் பெறுவதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புத்தக தடை வழக்கிலிருந்து நான் விடுவிக்கப்பட்டேன்.

ஆனால் அரசு கைப்பற்றிய ரூ. 10 இலட்சம் பெருமானமுள்ள 2000ம் நூல்களைத் திருப்பித்தரவில்லை. எனவே எனது நூல்களைத் திருப்பித் தருமாறு நான் தொடுத்த வழக்கு 12 ஆண்டுகாலத்திற்கு மேலாக நீதிமன்றங்களில் நீடித்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தயங்கியது. விசாரணை தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே வந்தது. இறுதியாக இன்று எனது முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, இந்த நூலை அடியோடு அழிக்கும்படி ஆணையிட்டுள்ளது. இந்திய நாட்டு நீதிமன்ற வரலாற்றில் இதுவரை இப்படிப்பட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டதில்லை.

எனது எழுத்துரிமை பறிக்கப்பட்டதாக நான் கருதவில்லை. மாறாக, அனைவருக்கும் சுதந்திரமாக சிந்தித்தல், எழுதுதல் ஆகிய உரிமைகள் பறிக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன். கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி மலையாள நாவல் ஒன்றுக்கு தடைவிதிக்கும்படி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவும் மற்றும் இரு நீதிபதிகளும் இணைந்து அளித்தத் தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்-

“நாம் ஒரு சர்வாதிகார நாட்டில் வாழவில்லை. சனநாயக நாட்டில் வாழ்கிறோம். சுதந்திரமாக நமது கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒரு எழுத்தாளனின் படைப்பு குறித்து அவரின் வாசகர்கள்தான் முடிவெடுக்கவேண்டும். வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து எனது வழக்கறிஞர்களுடன் கலந்துபேசி முடிவெடுப்பேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response