அரசுப்பணி தேர்வுக்கு ஆங்கிலத்தில் வினாத்தாளா? – கி.வெங்கட்ராமன் கண்டனம்

தமிழ்நாடு அரசு பணி தேர்வுக்கு தமிழில்
வினாத்தாள் இல்லையா? என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ….

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வரும் நவம்பர் 11 ஆம் நாள் தொடங்க உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் சிலவற்றை தமிழில் நடத்த முடியாது என்று அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கூட்டுறவு சங்கங்களின் ஆய்வாளர், பலதுறைகளின் உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட 23 துறை பணிகளில் 1199 காலியிடங்களை நிரப்புவதற்கு நடைபெற உள்ள இத்தேர்வில் சமூகவியல், அரசியலறிவியல் உள்ளிட்ட பல தாள்களுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் செயலாளர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கு அவர் கூறும் காரணம் நகைப்புக்கு உரியதாக இருக்கிறது; நம்பும்படியாக இல்லை. தமிழில் வினாத்தாள் தயாரிக்க தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இல்லை என்று அவர் காரணம் கூறுகிறார்.

தமிழ்நாடு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படாமல் போனால் தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களை வரவிடாமல் தடுக்கும் இனப்பாகுப்பாட்டுக் கொள்கையை தமிழ்நாடு அரசும் பின்பற்றுகிறது என்பதே பொருள். தமிழர்களுக்கு எதிரான இந்த இன ஒதுக்கலை அனுமதிக்க முடியாது.

இரண்டாம் தொகுதி தேர்வு எழுதும் 6.26 இலட்சம் தேர்வர்களில் 4.80 இலட்சம் பேர் பொது அறிவு மற்றும் தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இப்போட்டித் தேர்வில் தமிழில் வினாக்கள் கேட்கப்படாமல் ஆங்கிலத்தில் மட்டும் கேட்கப்பட்டால் மிகப்பெரும்பாலான தமிழ்நாட்டு இளைஞர்களை தேர்வு எழுத வருவதற்கு முன்னாலேயே தோல்வி அடைந்தோர் பட்டியலுக்கு தள்ளிவிடும் அநீதியாகும். ஏனெனில் சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களிலிருந்து தான் குறைந்தது 25 விழுக்காடு மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இவ்வினாக்கள் தமிழில் இருக்காது என்றால் மேற்சொன்ன 4.80 இலட்சம் தேர்வர்களை தோல்வி பட்டியலில் தள்ளுவதாகும்.

ஏற்கெனவே தமிழ்நாடு அரசு பணி தேர்வாணய விதிகளில் அரசுப் பணி தேர்வுகளில் இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், நேபாளம் பூட்டான் நாட்டவர்களும் வங்காளதேசம் இலங்கை நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்களும் பங்குப்பெற்று தேர்வு எழுதலாம் என்று திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன.

இச்சூழலில் அரசு பணி இரண்டாம் தொகுதி தேர்வில் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் இருக்கும் என்பது தமிழர்களை புறக்கணித்து வெளிமாநில மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கும் தமிழ் இன பகை நடவடிக்கையாகும்.

தேர்வாணயச் செயலாளர் கூறுவதைப் போல் ஆங்கிலத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டால், அதை தமிழில் மொழிப்பெயர்த்து வழங்குவதுகடினமான செயல் அல்ல.

உண்மையில் தமிழில் வினாத்தாள் தயாரிப்பதற்கோ, தமிழில் மொழிப்பெயர்த்து கொடுப்பதற்கோ தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லை என்று கூறுவது போட்டிகளிலிருந்து தமிழர்களை புறக்கணிக்க இட்டுகட்டி சொல்லப்படும் பொய்க்காரணமாகவே தெரிகிறது.

இது தற்செயலாக தோன்றிய திடீர் சிக்கலாக தெரியவில்லை திட்டமிட்ட சதியாகவே தெரிகிறது. ஏனெனில் அண்மையில் நடைப்பெற்ற தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் நடத்திய தொழில் நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்கள் தேர்வு ஆங்கிலத்தில் மட்டும்தான் நடந்தது. இனி நடக்க உள்ள கைரேகைப்பிரிவு உதவி ஆய்வாளர் தேர்வும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான திட்டமிட்ட தமிழ்ப்புறக்கணிப்பும் ஆங்கிலமயமாக்களும் தமிழ்நாட்டு அரசு வேலைவாய்ப்புகளை வெளி மாநிலத்தவர்களின் வேட்டைக்கு திறந்துவிடும் திட்டமிட்ட சதியாகும். தமிழர்கள் இதனை ஒரு போதும் ஏற்க முடியாது.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இச்சிக்கலில் உடனடியாக தலையிட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் இரண்டாம் தொகுதி தேர்வுகளை தமிழிலிலும் நடத்துவதற்கு ஆவனசெய்ய வேண்டும் எனவும், தமிழில் வினாத்தாள் தயாரிப்பதற்கு காலதாமதம் ஆகுமென்றால் நவம்பர் 11 ஆம் நாள் நடக்க உள்ள அத்தேர்வை ஒத்திவைத்து தமிழில் வினாத்தாள் தயாரித்தப் பிறகு வேறொரு நாளில் நடத்திக் கொள்ள அறிவிப்பு ஆணை வெளியிட வேண்டும் எனவும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறித்திக் கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response