டி20 முதல்போட்டியில் வென்றது இந்தியா

இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தவான் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இரண்டு விக்கெட்டுக்களையும் தாமஸ் வீழ்த்தினார். 16 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா தொடக்க பேட்ஸ்மேன்களை இழந்தது.

வேகப்பந்து வீச்சாளர்கள் தாமஸ், கீமோ பால், பிராத்வைட் பவுன்சர் பந்தால் கடும் நெருக்கடி கொடுத்தார்கள். வேகப்பந்தை சமாளிக்க முடியாமல் ரிஷப் பந்த் 1 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 16 ரன்னிலும் வெளியேறினார்கள். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் பிராத்வைட் வீழ்த்தினார்.

இந்தியா 7.3 ஓவரில் 45 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 75 பந்தில் 65 ரன்கள் என்ற நெருக்கடி ஏற்பட்ட நிலையில் 5-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார்.

12-வது ஓவரை பொல்லார்டு வீசினார். இந்த ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசினார் தினேஷ் கார்த்திக். இதனால் இந்தியா சற்று நிம்மதி அடைந்தது.

கடைசி 8 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. இந்தியாவின் ஸ்கோர் 83 ரன்னாக இருக்கும் போது மணிஷ் பாண்டே 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 6-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக்வுடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்து இருவரும் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.

17.5 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 110 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கார்த்திக் 31 ரன்னுடனும், குர்ணால் பாண்டியா 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

Leave a Response