பெண்களை அனுமதித்தால் சபரிமலை பாலியல் தளமாகிவிடும் – சர்ச்சைப் பேச்சு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாத வழிபாட்டுக்காக நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் நேற்று சென்றனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தினர்.

அத்துடன் 10 வயதுக்கு மேலிருந்து 50 வயதுக்குள் உள்ள பெண்கள் சபரிமலை சந்நிதானத்துக்கு செல்வதை தடுக்க வழிகளான எருமேலி, பம்பை, நிலக்கல், பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சமாஜம் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி நடத்த, பதிலுக்கு பக்தர்களும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக பேட்டியளித்துள்ள திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் ப்ரேயர் கோபாலகிருஷ்ணன், “பெண்களை அனுமதித்தால், அவர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் உறுதியளிக்க முடியாது. சபரிமலையை நாங்கள் தாய்லாந்து போன்ற பாலியல் நகரமாக மாற்ற விரும்பவில்லை. பெண்களை அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், தன்மானம் உள்ள பெண்கள் சந்நிதானத்திற்கு செல்லமாட்டார்கள். அப்படி செல்பவர்களை தன்மானம் கொண்டவர்கள் என நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Leave a Response