சபரிமலைக்கு யார் செல்லலாம்? கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பால் அடுத்த சர்ச்சை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களுக்கும் செல்லும் அனுமதி உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழக்கி இருந்தது. அதை எதிர்த்து பா.ஜ.க உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த டி.ஜி.மோகன் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மண்டல பூஜை தொடங்கிய உடன் பக்தர்களைத் தவிர மற்றவர்களைக் கோயிலுக்குள் வரத் தடைவிதிக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களுக்கும் அனுமதி வழங்கிய தீர்ப்பை அடுத்து, கோயிலுக்குள் சில மாற்று மதத்தைச் சார்ந்தவர்களும், வழிபாடுகளில் நம்பிக்கை அற்றவர்களும் உள்ளே வர முயல்வதால் அவர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராமச்சந்திர மேனன், தேவன் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில்,

சபரிமலை ஐயப்பன் கோயில் இந்துக்களுக்கு மட்டுமானதில்லை. நம்பிக்கை உள்ள யார் வேண்டுமானாலும் போகலாம். கோயிலுக்குச் செல்ல இரு முடி அவசியமில்லை ஆனால், பதினெட்டு படியில் ஏறுவதற்கு இரு முடி அவசியம் எனத் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரத்தில் கேரளா அரசும், திருவிதாங்கூா் தேவஸ்தானமும் இரு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று வழக்கை ஒத்திவைத்தது. பெண்களுக்கு ஆதரவாகத் தீர்ப்புகள் வந்த பின்னரும் பலர் அதை எதிர்ப்பதால், பெண்கள் சிலர் கோயிலுக்குச் செல்லப் பாதுகாப்பு வசதி வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த விவகாரத்தில், பக்தர்களாக இருந்தால் அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

இதனால் அடுத்த சர்ச்சை தொடங்கியுள்ளது.

Leave a Response