பாஜகவை வைத்துக்கொண்டு தமிழியக்கம் சாத்தியமா? – பொழிலன் கேள்வி

உலகத்தமிழர்கள் அனைவரையும் ஒருகுடையின் கீழ் ஒருங்கிணைப்பதற்காக ‘தமிழியக்கம்’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அக்டோபர் 15 அன்று நடந்தது. விழாவுக்கு தமிழியக்கத்தின் நிறுவன தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கருமுத்து தி.கண்ணன் வரவேற்றார்.

விழாவில்,மொரீசியஸ் நாட்டு ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி, கயானா நாட்டு பிரதமர் மோசசு வீராசாமி நாகமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

தீந்தமிழ் திறவுகோல்என்ற நூலை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட டாக்டர் அக்பர் ஹவுசர் பெற்றுக்கொண்டார். ‘தமிழியக்கம்’ அமைப்பின் வலைத்தளத்தை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கிவைத்தார்.

இவ்விழாவில்,தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் பாராட்டரங்கம் நடந்தது.

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், ஊரன் அடிகள் உள்பட பல மூத்த தமிழ் சான்றோர்கள் பாராட்டப்பட்டனர்.

தமிழியக்கத்தின் வாழ்த்தரங்கம் மாலை நடந்தது. அதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ,பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக தமிழின உணர்வாளர் பொழிலன் எழுதியுள்ள குறிப்பில்…..

உலகத் தமிழர்களை எல்லாம் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் தமிழியக்கம் முயற்சிக்குப் பாராட்டுகள்..

ஆனால்,
பொன். இராதாகிருட்டிணனும்,
இல. கணேசனும்,
தமிழிசை சௌந்தரராசனும்
தமிழியக்க முயற்சிக்கு உரியவர்களா?

சமஸ்கிருதத்தைத் தேவ மொழி என்றும், தமிழை நீசமொழி என்று சொல்லக்கூடிய சங்கராச்சாரியின் – ஆர் எஸ் எஸ்ஸின் வழிகாட்டலில் இயங்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி இந்திய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு சமஸ்கிருதத்திற்காக ஆயிரம் கோடி உருபாயைச் செலவழிக்கிறது, சமஸ்கிருதத்திற்காக மாநாடுகளை நடத்துகிறது… ஆனால் தமிழ்வழிக் கல்வியைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதில் கூட தடையாக இருக்கிறது.. வழிபாட்டில் தமிழ் இல்லை, உயர்நெறி(நீதி)மன்றத்தில் தமிழ் இல்லை அப்படியெல்லாம் நடைமுறைப்படுத்துவதில் முதன்மையாக இருப்பது, தமிழை மறுப்பது பாரதிய ஜனதா கட்சி…

சம்ஸ்கிருதம் உயர்த்திப் பிடிக்கிற வேத, புராணங்கள் அனைத்தும் சொல்லுகிற தர்மம் என்பது ஏற்றத்தாழ்வுகளை, சாதி அமைப்பை கட்டாயப்படுத்துகிற வர்ணாசிரம ‘தர்ம’த்தையே..

அவர்களின் தர்மம் என்பது வர்ணாசிரம தர்மமே!..

தமிழர்களுடைய பொதுமை, நேர்மைக் கண்ணோட்டம் வலியுறுத்துவது அறத்தையே..
அறம் என்பது வேறு, தர்மம் என்பது வேறு..
தமிழரின் அறம் பொதுமையைச் சொல்வது, நேர்மையைக் கடைப்பிடிப்பது..
ஆரியம் சொல்லும் தர்மம் சாதியைச் சொல்வது.. வர்ணத்தைச் சொல்வது..

ஆக, சமஸ்கிருதமும் தமிழும் இரண்டு வேறுபட்ட எதிர்நிலைகள்..

சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொள்பவர்கள் தமிழை, தமிழிய அறத்தை ஒப்புக் கொள்ள முடியாதவர்கள்..
தமிழியத்தை ஏற்றுக்கொள்பவர்கள் சமஸ்கிருத தர்மத்தை எதிர்ப்பவர்கள்..

அந்த வகையில் தமிழியக்கத்தில் ஆரியம் இணைய முடியாது, இணையக் கூடாது..

ஆரிய, சமஸ்கிருதச் சார்பு கருத்துகளை மறுப்பவர்களே, எதிர்ப்பவர்களே பாவேந்தர் காட்டிய தமிழியக்கத்தில் இணைய முடியும்…

இந்நிலையில், பொன். இராதாகிருட்டிணனையும், இல. கணேசனையும், தமிழிசை சௌந்தரராசனையும் இணைத்துக்கொள்வது தமிழியக்கமாக ஆக முடியாது..

அந்தத் தெளிவோடு தமிழியக்கம் கட்டப்பட்டால் அது தமிழியக்கமாக இருக்கும்…

தொடர்புடையோர் எண்ணிச் செயல்பட வேண்டும்..!

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response