மசூதியில் பெண்களை அனுமதிக்க இந்து அமைப்பு கோரிய விநோதம்

கேரளாவில் உள்ள அகில பாரத இந்து மகா சபையின் தலைவர் சுவாமி தத்தாத்ரேயா சாய் ஸ்வரூப் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் நூற்றாண்டு காலமாக வழிபாடு நடத்த இருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்து பாலின சமத்துவத்தை நிலைநாட்டியது. அதேபோன்று மசூதிகளிலும் முஸ்லிம் பெண்கள் சென்று தொழுகை நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

மேலும், மசூதிக்குள் முஸ்லிம் பெண்கள் தொழுகை நடத்தப் பிரதான தொழுகை அறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் பிரிவு 14, 21 ஆகியவற்றுக்கு விரோதமானதாகும். புனித மெக்கா நகரத்தில் முஸ்லிம் பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். ஆதலால், மசூதிகளிலும் முஸ்லிம் பெண்கள் சென்று தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதால், அந்த புர்காவை சிலர் தவறாகப் பயன்படுத்தி சமூகக் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரருக்கும் மனுத்தாக்கல் செய்தமைக்கும் எந்தவித தொடர்புமில்லாமல் இருக்கிறது. இந்த மனுதாரர் எந்தவிதமான அரசியல் கட்சியையும் சாரவில்லை, அவரின் எந்த உரிமையும் பாதிக்கப்படாத சூழலில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார் எனக் கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Leave a Response